மட்டக்களப்பு ஆலயங்களில் திருட்டு; சந்தேக நபர் கைது | தினகரன்


மட்டக்களப்பு ஆலயங்களில் திருட்டு; சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேக நபர் ஒருவரைக் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.டி.நாகரத்தின தெரிவித்தார்.  

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயம், விநாயகபுரம் நாகதம்பிரான் ஆலயம், மருதநகர் சிவமுத்துமாரியம்மன் ஆலயம், மருதநகர் சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றின் வாயில் கதவினை உடைத்து உற்சவத்திற்கு பயன்படுத்தும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.  

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸின் பணிப்புரைக்கமைய வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பாறுக் வழிகாட்டலில் கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.டி.நாகரத்தின தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றன.  இதன்போது விநாயகபுரத்தினை சேர்ந்த சந்தேக நபரினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 26 சிலம்புகள் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் கல்குடாப் பகுதியில் பல திருட்டு சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.  

மேலும் விளக்குகள், பூசை வட்டா, தீபம் உட்பட்ட ஆராதனை பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

பாசிக்குடா நிருபர்  


Add new comment

Or log in with...