மன்னார் மறை மாவட்டத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகள் | தினகரன்

மன்னார் மறை மாவட்டத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” என்ற இயேசுவின் செபமானது இன்றைய உலகில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையில் நிலவவேண்டிய ஒற்றுமையை வலியுறுத்தும் வார்த்தைகளாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம்  25ஆம் திகதிவரை உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது பிரதான கிறிஸ்தவ சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பையும்  ஒற்றுமையையும் குறிக்கும். கத்தோலிக்கத் திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, அமெரிக்க மிஷன் திருச்சபை, லூத்தரன் திருச்சபை போன்ற பிரதான திருச்சபைகளுக்கிடையிலான ஒன்றிப்பை இது குறிக்கின்றது. 

சுயாதீன திருச்சபைகள் அல்லது பெந்தகோஸ்தே திருச்சபை என்று அழைக்கப்படுகின்ற சிறிய கிறிஸ்தவ சபைகள் இந்த ஒன்றிப்புக்குள் இதுவரை சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

உலகக் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மன்னார் மறைமாவட்டத்தின் சர்வமத மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரினால் இந்நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்குகளுக்கு ஒன்றிப்புவார ஞாயிறு திருப்பலிக் குறிப்புகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒன்றிப்பு வாரச் செய்தி போன்றவை அனுப்பிவைக்கபட்டிருந்தன.

மன்னார் மறைமாவட்டத்தில் வவுனியா மற்றும் முருங்கன் ஆகிய இரண்டு மறைக்கோட்டங்களில் இந்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இந்த இரண்டு மறைக்கோட்டங்களிலும் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையில் ஒன்றிப்பை ஏற்படுத்தும் முகமாக ஏற்கனவே மறைக்கோட்ட மட்டத்திலான இரண்டு அமைப்புக்கள் “மன்னார் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம்” மற்றும் “வவுனியா கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம்” என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மன்னார் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செபவழிபாட்டு நிகழ்வை நறுவிலிக்குளம் மெதடிஸ்த ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 

முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. சிரேந்திரன் றெவல் அடிகளார் இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கினார். நிகழ்வில் பங்கெடுத்த அனைவரும் வஞ்சியன்குளம் பங்கிற்கு உட்பட்ட மாதிரிக்கிராம அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இருந்து மெதடிஸ்த ஆலயம் நோக்கி பவனியாகச் சென்றனர்.

பின்னார் மெதடிஸ்த ஆலயத்தில் ஒன்றிப்புச் செபவழிபாடு ஆரம்பமாகியது.

செப வழிபாட்டில் அருட்பணி. சுரேந்திரன் றெவல்,. முருங்கன் மெதடிஸ்த குரு அருட்பணி. திருமறைதாசன், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. விக்ரர் சோசை, கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்குனர் அருட்பணி. தமிழ் நேசன், மெதடிஸ்த  குருவானவர் அருட்பணி. ஜெகதாஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

அருளுரையை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் அருட்பணி. எஸ். எஸ். ரெறன்ஸ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் வஞ்சியன்குளம் பங்கைச் சேர்ந்த கத்தோலிக்க இறைமக்களும் நறுவிலிக்குளம் பகுதியைச் சேர்ந்த மெதடிஸ்த திருச்சபையினரும் முருங்கன் மறைக்கோட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பங்குகளின் கத்தோலிக்க, மெதடிஸ்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை வவுனியா கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியத்தின் செபவழிபாடு வவுனியா அமெரிக்க மிஷன் திருச்சபையின் புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. ஜெபரெட்னம் அடிகளார், அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. இராஜநாயகம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பஙகேற்றனர்.வவுனியா  இறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி. எம். ஜெயபாலன் அடிகளார் இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கினார்.

தென்னிந்தியத் திருச்சபையின் குருவானவர் அருட்பணி. நைல்ஸ், அமெரிக்க மிஷன் திருச்சபையின் குருவானவர் அருட்பணி. ஆர். யோண் செல்வம், இலங்கைத்ருச்சபையின் குரு அருட்பணி. பி. தயாளன், கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை அருட்பணி. சுகுணராஜ், அருட்பணி. ஜோண் புவியரசன் ஆகியோர் இவ்வழிபாட்டை நெறிப்படுத்தினர்.

திருச்சபைகளுக்கிடையில் உறவை வலுப்படுத்தும் நிகழ்வுகளாக இந்த நிகழ்வுகள்ள் அமைந்திருந்தன. (ஸ)


Add new comment

Or log in with...