புதிய சிந்தனைகளை நோக்கி தமிழர்கள் நகர வேண்டும் | தினகரன்

புதிய சிந்தனைகளை நோக்கி தமிழர்கள் நகர வேண்டும்

புதிய சிந்தனைகளை நோக்கி தமிழர்கள் நகரவேண்டும் என முன்னாள் வட, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தமிழருக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்று சிங்கள தரப்பில் பலர் கூறிநின்றனர். எங்களில் எத்தனை பேருக்கு அவர்களைத் தெரியும். அவர்களை கௌரவிக்க நாம் தயாராக இருக்கிறோமா? அவர்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் துரோகிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். ​ைஆனால், நாங்களும் அவர்களை படலைக்கு எடுக்கமாட்டோம். எங்களது படலையில் நின்றிருந்த இந்தியாவை எங்கயோ கொண்டுபோய் நிறுத்தினோம். இருக்கின்ற நண்பர்களை எல்லாம் கெடுத்து சுடுகாடாக்கினோம். எனவே, புதியசிந்தனைகளை நோக்கி நகரவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. பழைய விடயங்களையும் புதிதாக சிந்திக்கவேண்டும். இது முன்னேறவேண்டிய சமூகம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு.

வட கிழக்கு இணைப்பு என்பது 1988ஆம் ஆண்டு நடந்ததுபோல அமையாது. ஆனால், தமிழர்களின் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களோடு மனம் திறந்துபேசி அவர்களது சந்தேகங்களிற்கும் கோரிக்கைகளிற்கும் இடமளித்தால் வடக்கு கிழக்கு இணைவதற்கு சிங்களவர்களும் இணைந்து வருவார்கள். அந்த அரசியல் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.  

அரசோடு நின்றால் துரோகி, அமைச்சர்களுடன் நின்றால் ஒட்டுக் குழு என்று கூறிவிட்டு க​ைடசியில் அண்மைய நாட்களில் எங்கு போய் இவர்கள் நிற்கின்றார்கள்.இப்பொழுது அவர்கள் தலைவர்களாம். இப்படி ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இவர்கள் மோசமானவர்கள், பொய்யர்கள் புலிகளின் பெயரைசொல்லி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிவரும் இவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக எந்த முயற்சியினையும் ஏற்படுத்தாதவர்கள்.  

நான்கு வருடமாக அபிவிருத்தி பற்றிப் பேசமாட்டோம் உரிமைகள் கிடைக்காது என்று கூறிவிட்டு தற்போது உரிமை கிடைத்தது போல மாயை உருவாக்குகின்றனர். அமைச்சர்கள் வந்தால் பின்னாலும், முன்னாலும் போய் நின்று படமெடுக்கிறார்கள், தூக்குகிறார்கள், காவுகிறார்கள். நாங்கள் பிழைவிட்டு விட்டோம் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறவேண்டியதுதானே.  

இல்லையாயின் தேர்தல் வருவதால் அவர்களது விளையாட்டுகளை காட்டுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் கடந்த பின்னர் மீண்டும் வருவார்கள் ரணில் ஏமாற்றிவிட்டார், நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று. எனவே முற்போக்கான மாற்றங்களையும், முன்னேறுவதற்கான மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும் நோக்கி நாங்கள் செயற்படவேண்டும் என்றார்.  

வவுனியா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...