ஐ.எஸ் உறுப்பினர்களை ஏற்கும்படி ஐரோப்பாவுக்கு டிரம்ப் கோரிக்கை | தினகரன்


ஐ.எஸ் உறுப்பினர்களை ஏற்கும்படி ஐரோப்பாவுக்கு டிரம்ப் கோரிக்கை

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தில் பிடிபட்ட 800க்கும் அதிகமான அந்தக் குழுவன் உறுப்பினர்களை பொறுப்பெற்று அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை நடத்தும்படி ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.  

சிரியாவின் ஈராக் எல்லையை ஒட்டிய ஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் அவர்களை வீழ்த்துவதற்கு அமெரிக்க ஆதரவு குர்திஷ் படை போராடி வரும் நிலையிலேயே டிரம்ப் இந்த ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.  

குர்திஷ் தலைமையிலான போராளிகளிடம் ஐ.எஸ் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ.எஸ் கலீபத் “வீழத் தயாராக உள்ளது” என்று தனது ட்விட்டரில் டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

“பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய கூட்டணி நாடுகள் சிரியாவில் நாம் கைப்பற்றிய 800 ஐ.எஸ் போராளிகளை திரும்ப அழைத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது” என்று டிரம்பின் ட்விட்டரில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.  

ஐ.எஸ் குழுவுக்கு எதிரான வெற்றி பிரகடனத்தை ஒரு வாரத்தில் வெளியிடுவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தபோதும் ஒருவாரம் கடந்த நிலையிலும் அவ்வாறான ஒரு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.  

எனினும் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் அவ்வாறான ஒரு அறிவிப்பு அடுத்த ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று குர்திஷ் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.  

ஐ.எஸ் குழுவுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் இடம்பெற்று வரும் பங்குஸ் கிராமத்தில் அந்தக் குழு 700 சதுர மீற்றர் புகதிக்குள் சிக்கி இருப்பதாக அங்கு குர்திஷ் படைகளின் கட்டளை தளபதியாக செயற்படும் ஜியா புராத் குறிப்பிட்டுள்ளார்.  

“மனிதக் கேடயங்களாக அங்கு தொடர்ந்து பொதுமக்கள் உள்ளனர். ஐ.எஸ் குழுவை ஒழித்த செய்தியை எதிர்வரும் சில நாட்களில் நாம் உலகுக்கு குறிப்பிடுவோம்” என்றும் அவர் கூறினார்.  

ஐ.எஸ் பெரும் இழப்புகளை சந்தித்தபோதும் ஈராக் மற்றும் சிரியாவில் அந்தக் குழுவின் 14,000 தொடக்கம் 18,000 உறுப்பினர்கள் இருந்து வருவதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.      


Add new comment

Or log in with...