வடக்கில் யுத்தத்தால் கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்தில் உள்ளது | தினகரன்

வடக்கில் யுத்தத்தால் கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்தில் உள்ளது

பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

வடமாகாணத்தில் இடம் பெற்ற 30 வருட கால யுத்தம் காரணமாக தொழில் வளர்ச்சி மிகவும் பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்திலே காணப்பட்டது. இதனால் மக்களின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நாம் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றோம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

மன்னார்-மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விற்கும் இடையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வரவு-செலவு திட்டத்திற்கு முன்பாக மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு விடை கண்டு அவற்றிற்கு தீர்வுகளை காண்பதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக அந்த முயற்சி தோழ்வியில் முடிவடைந்தது.

இந்த பாரிய சேவைக்காக நாம் முன் வந்தது நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய அமைச்சு கைத்தொழில் அமைச்சு என்பதற்காக. நமது நாட்டில் இருக்கின்ற கூடுதலான நிறுவனங்களை கொண்ட அமைச்சுக்களை வரிசைப்படுத்தினால் அவற்றில் இரண்டாம் இடத்தை பெறுவது நமது கைத்தொழில் அமைச்சு.

நமது நாட்டில் இருக்கின்ற அனைத்து உத்தியோகஸ்தர்களுள் அதிகலவானவர்கள் நமது அமைச்சின் கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். பாரிய,சிறிய,நடுத்தர கைத்தொழிலாளர்கள் இங்கே இருக்கின்றார்கள். நுகர்வோர் அதிகாரசபை, சதொச போன்ற நிறுவனங்களும் இந்த கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்றது.

இந்த நிலையில் மாவட்ட ரீதியில் கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக நாம் கேட்டு அறிந்து வருகின்றோம்.எமது நோக்கம் குறுகிய கால, இடைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும்.

வடமாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் யுத்தம் இடம் பெறவில்லை. ஒரு சில காரணங்களை தவிர ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு முன்னேற்ற பாதையிலே சென்று கொண்டிருந்தார்கள். எனினும் வடமாகாணத்தில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் காரணமாக தமது தொழில் வளர்ச்சி மிகவும் பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத்திலே காணப்பட்டது. இதனால் தங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நாம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன,அமைச்சின் மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வடமாகாண பணிப்பாளர் திருமதி தவலோஜி,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சந்தியோகு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது தொழிற்பயிற்சியை நிறைவு செய்த 10 பயனாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொஸாரியன்)


Add new comment

Or log in with...