அறுவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் | தினகரன்

அறுவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்

புத்தளத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் அறுவக்காட்டில் கொட்டுமாறு மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கோரிக்கையை புத்தளம் நகர சபை நிராகரிப்பதாக நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை (14) நடைபெற்ற புத்தளம் நகர சபையின் மாதாந்த சபை அமர்வின் போதே கட்சி வேறுபாடுகள் இன்றி, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் ௯றினார்.

புத்தளம் அறுவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை (15) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்த பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு  திண்மக் கழிவு முகாமைத்து நிலையத்திற்கு எடுத்துவரும் திட்டத்தை இந்த அரசாங்கம் கைவிட வேண்டும் என புத்தளம் நகர சபை மீண்டும் கோரிக்கை விடுக்கிறது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஏனைய நகர சபை, பிரதேச சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் நகரின் ஊடாக அறுவக்காடு  பகுதிக்கு எடுத்துச் செல்வதை, சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டு புத்தளம் நகர சபை தடை செய்கிறது என்று பிரகடனங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு இணைந்து பயணிக்கிறது , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறது என்பதால் வாய்மூடி மௌனிகளாக இருக்க முடியாது. இவ்விடயத்தில் பிரதமர் உடனடி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றார்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்)   


Add new comment

Or log in with...