புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு | தினகரன்

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு

புத்தளம், சிலாபம் பிரதான வீதியின் மஹாவெவ பிரதேசத்தில் இன்று (18) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாரவில மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 19 பேரில் 16 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் பஸ்ஸினுள் சிக்கியிருந்த காயங்களுக்குள்ளானவர்களை பிரதேச மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரையில் இனம் காணப்படவில்லை எனத் தெரிவித்த மாரவில பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...