துபாயில் கைதான பாடகர் உள்ளிட்ட 15பேர் நாடு கடத்தப்படும் சாத்தியம் | தினகரன்

துபாயில் கைதான பாடகர் உள்ளிட்ட 15பேர் நாடு கடத்தப்படும் சாத்தியம்

துபாயில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மாக்கந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று தெரியவருகிறது.

இவர்கள் மீதான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது இந்தப் பதினைந்து பேரும் நாடு கடத்தப்படலாம் என்று அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பாடகர் அமல் பெரேராவும் அவரது மகனும் மீண்டும் துபாய் வரவேண்டியிருப்பதால், அவர்களின் வீசாவை ரத்துச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணி சப்திக்க வெல்லபுலி தெரிவித்துள்ளார்.

இவர்களை துபாய் நிகழ்ச்சிக்காக அழைத்தது ஒரு மூன்றாந்தரப்பு என்றும் அவர்கள் மதூஷின் மகனின் பிறந்த நாளுக்காகப் பாட வந்திருப்பது பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் எந்த விதத்திலும் பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு பட்டிருக்கவில்லையென்பதால், அவர்கள் மீதான தண்டனை விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுக்கான பிணை மனுவை இவ்வாரம் துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணி வெல்லபுலி தெரிவித்துள்ளார்.

(நமது நிருபர்)


Add new comment

Or log in with...