முள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும் | தினகரன்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்

அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கை

மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல், முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும் விடுவிக்கப்படாமை மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் காணப்படும் இழுபறி நிலை போன்றவை தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.  

மன்னார் மாவட்ட செயலகத்தில் (15) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற 'மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்' போதே மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.  

சிலாவத்துறை இராணுவ முகாமின் ஒருபகுதியை விடுவிப்பதாக ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. வட மாகாணத்தின் பிரதான நகரமான சிலாவத்துறை நகரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருப்பதால் அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் அன்றாட வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.  

நாங்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளின் பின்னர், மக்களுக்குச் சொந்தமான காணிகளில் 6 ஏக்கர் 88 பேர்ச் காணியை விடுவிப்பதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இன்னும் அவ்வாறு நடைபெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

இந்த கடற்படை முகாமை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்பது பற்றியும் அரசு சிந்திக்க வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். 

அத்துடன் கிறிஸ்தவ மக்களின் பாரம்பரிய பிரதேசமான முள்ளிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் நான்கு குளங்கள் உள்ளன. அதனை புனரமைத்தால் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் நன்மையடையும். 

1990 ஆம் ஆண்டு இந்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடி நிலக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதனால் மீள் குடியேற வரும் மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி உள்ளனர். 

பிரதமர் இந்த விடயங்களில் தலையிட்டு தமது அதிகாரங்களை பயன்படுத்தி இந்த காணிகளை மக்களுக்கு மீட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மல்வத்து ஓயா திட்டம் தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற போதும் இன்னும் இந்த மாவட்டத்திற்கு அந்த நீர்த்திட்டம் கொண்டு வரப்படவில்லை. 

அனுராதபுரம் பகுதிக்கு இந்த திட்டத்தை திசை திருப்ப போவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் இந்திய காவேரி பிரச்சினை போன்று இன்னுமொரு பிரச்சினை உருவாகுமென அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்த போது, அங்கு பிரசன்னமாகி இருந்த அமைச்சர் பி.ஹரிசன், மல்வத்து ஓயா திட்டம் பழைய முறையிலேயே நடை முறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார். 

சுகாதார விடயங்கள் தொடர்பிளான மீளாய்வு இடம்பெற்ற போது ,அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மன்னார் மக்களின் வைத்திய பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.  

'வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை போல் இன்றி மன்னார் மாவட்டமானது வைத்திய வசதியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, பி. ஹரிசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன் தாஸ், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

(மன்னார் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...