போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் | தினகரன்

போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்

"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள் எம்மாவட்டத்தினூடாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லும் ஒரு கேந்திர நிலையமாக மாறியுள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்படைய வேண்டும். இந்த நிலையை மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் இளைஞர்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும்" என பாராளுமன்ற குழு பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

மன்னாரில் இளையோர் அணி அங்குரார்ப்பணம் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, "இளைஞர்களின் செயற்பாடுகள் எமது தேசத்தில் எப்படி இருந்தது, எப்படி இருக்கின்றது என்பதை இளைஞர்களாகிய உங்களுக்குத் தெளிவுப்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாக இருக்கின்றது. 

எங்களுடைய கட்சியின் முக்கிய நோக்கம், இளைஞர்கள் எதிர்காலத்தில் எமது மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளை தீர்த்து வைப்பதில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தயார்ப்படுத்தலே எமது நோக்கமாகும். எமது தேசத்திலே பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டம், சிறையில் பல வருடங்களாக துன்பப்படும் எமது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம். இது இப்படியிருக்க, இவ்விடயங்களில் எமது இளைஞர்களின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. மன்னார் மாவட்டத்திலே விளையாட்டுத் துறையிலே உதைபந்தாட்டம் பேசப்படும். 

ஒரு விடயமாக இருக்கின்றது. இது எமது மன்னார் மாவட்டத்துக்கு பெருமை தேடித்தரும் இளைஞர்களின் பெருமையைக் காட்டுகின்றது. 

இவ்வாறு பல விடயங்களில் மன்னார் மாவட்டத்தின் பெருமை எவ்வாறு இருக்கின்றது என்பதை எமது இளைஞர்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதே எமது இன்றைய இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. நாம் விளையாடியதோடு மட்டும் அல்லது தொழிலுக்கு சென்று வந்து இருப்பதோ அல்லது படித்துவிட்டு தொழிலின்றி இருப்பதோ இவைகள் எமது இளைஞர்களை வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றது.

மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள் எம் மாட்டத்தினூடாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லும் ஒரு கேந்திர நிலையமாக மாறியுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் விழிப்படைய வேண்டும். இந்த நிலையை மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் இளைஞர்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும்" என்றார்.    

தலைமன்னார் நிருபர் 


Add new comment

Or log in with...