தணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது | தினகரன்

தணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது

தணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தணமல்வில பிரதேசத்தில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்திருந்ததோடு மற்றுமொருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தணமல்வில பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இன்று (16) நள்ளிரவு கடந்து 12.30 மணியளவில் தணமல்வில பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களில் மூவர், மூன்று துப்பாக்கிகள் அதற்கான தோட்டாக்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் 28, 27, 25 வயதுடைய தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 துளை கொண்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டா ஒன்றும் வெற்று தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 துளை கொண்ட நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...