முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை | தினகரன்

முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை

இலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள் சுமுகமாக தீர்க்கப்படுகின்றன. மத்தியஸ்த முறைமை இனிமேல் பாடசாலைகளிலும் அறிமுகம்

இறக்காமம் பிரதேசத்துக்கான மத்தியஸ்த சபை புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் இறக்காமம் பிரதேச சபை மண்டபத்தில் மத்தியஸ்த சபை தவிசாளர் எஸ். ஐ. பஸ்லுல் ஹக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைகள் மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆசாத் அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது பயிற்றுவிப்பாளர் ஆஸாத் மத்தியஸ்த சபை முரண்பாடுகள், மத்தியஸ்த நடைமுறைகள் சம்பந்தமாக உரையாற்றினார். 

மத்திய சபை நடைமுறை சம்பந்தமாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் மத்தியஸ்தர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், நடைமுறைகள், பிணக்குகள் ஏற்படும்போது சிரமம் இல்லாமல் இலகுவாக தீர்த்துக் கொள்ளும் வழிகள், முரண்பாடுகளின் வகைகள் சம்பந்தமாகவும் அங்கு தெளிவுபடுத்தப்பட்டது.  

மனிதன் பண்டைக் காலம் தொடக்கம் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பல வழிகளை பயன்படுத்திக் கொண்டான். பல தரப்பட்ட சமுதாயம் ஒன்றில் வாழ்கின்ற மனிதன் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை அதிகமாக நாடப் பழகி உள்ளான். ஆயினும் நீதிமன்ற செயற்பாடுகள் அதிக காலத்தையும் அதிக செலவையும் ஏற்படுத்துவதோடு பிணக்குதாரர்களுக்கிடையே வெற்றி தோல்வியை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாக விளங்குகின்றது.  

இதன் மூலம் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால் மத்தியஸ்த சபை செயற்பாடுகள் மனிதர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பல பிணக்குகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு வழிமுறையாக காணப்படுகிறது. இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு இச்சபையில் கிடைக்கிறது. இரண்டு தரப்பினருக்கும் வெற்றி என்ற திருப்தி ஏற்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் பிணக்குதாரர்களுக்கிடையிலுள்ள ஒரு பிணக்கை மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள மத்தியஸ்த சபை உதவுகிறது. இச்சபையில் அதிக நேரம் எடுப்பதில்லை,செலவுகள் இல்லை. கிடைக்கின்ற தீர்வுகள் இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.  

அந்தவகையில் மத்தியஸ்தரானவர் பிணக்குதாரர்களிடையே தொடர்புகளைப் பலப்படுத்தி பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பார். பிணக்கைத் தீர்ப்பதற்கு நீதியான வழியைக் காட்டிக் கொடுப்பதோடு தகுந்த வழியொன்றை தெரிவு செய்து பிணக்கை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வழிகாட்டக் கூடியவராக மத்தியஸ்த சபை உறுப்பினர் செயற்படுவார். 

இன்று நாட்டில் 329மத்திய சபைகள் இயங்குகின்றன. இச்சபைகளினூடாக பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் அளவின் நூற்று வீதம் தற்போது உயர்ந்துள்ளது. 65%வீதமான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன.  

மேலும் பாடசாலைகளில் ஏற்படுகின்ற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பாடசாலை மத்தியஸ்த சபை உருவாக்கப்பட்டுள்ளது. இச்சபையில் 35பேர் உள்ளனர். 30மாணவர்களும் 05ஆசிரியர்களும் இதில் அடங்குவர். தற்போது 32தேசிய பாடசாலைகளில் மத்தியஸ்த சபைகளை உருவாக்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் இரண்டு தேசிய பாடசாலைகளுக்கு மத்தியஸ்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எமது சமூகத்தில் காணப்படுகின்ற பல பிரச்சினைகளையும், பிணக்குகளையும், தவறுகளையும் தீர்த்துக் கொள்வதற்கு மத்தியஸ்த சபைகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதனால் இலங்கை மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் ஒரு ஆசிய நாடாக மாறியுள்ளது. 

மத்தியஸ்தம் என்றால் என்ன? என்பதை நோக்கும் போது, உதவியுடன் கூடிய கலந்துரையாடலே மத்தியஸ்தமாகும் என்பதே விடையாகும். அதாவது சுயவிருப்புடன் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் பக்கச்சார்பற்றதும் மூன்றாம் தரப்பின் பங்களிப்புடனும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் தீர்வு ஒன்றுக்கு நெருங்குவதற்கு உதவும் கலந்துரையாடல் மத்தியஸ்தமாகும்.  

மேலும் முரண்பாடுகள், பிணக்குகள் எவ்வாறு ஏற்படுகின்றன? என்பதை ஆராயும்போது, 

மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன் என்பது முக்கியமானது.ஒருவரைப் போல் மற்றவர் இல்லை. ஒவ்வொருவரின் ஆற்றல்களும் திறமைகளும் வித்தியாசமானவை.இந்தத் தன்மைகளால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதாவது முரண்பாடு என்பது ஒவ்வாத இலக்குகளைக் கொண்ட அல்லது தம்மிடையே அவ்விதம் கருதுகின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரிடையே உள்ள உறவே முரண்பாடு ஆகும். அந்த வகையில் சமூகத்தில் மனிதர்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

1) உண்மையான முரண்பாடுகள்: 

a.தேவைகள் (அக்கறைகள்) சம்பந்தமான முரண்பாடுகள்  

b.கட்டமைப்பு சம்பந்தமான முரண்பாடுகள் இதிலடங்கும். 

2) போலியான முரண்பாடுகள்: 

a. தொடர்புகள் (உறவு) சம்பந்தமான முரண்பாடுகள் 

b. தகவல் சம்பந்தமான முரண்பாடுகள் 

c. விழுமியம் சம்பந்தமான முரண்பாடுகள் என்பன இதிலடங்கும். 

உண்மையான முரண்பாட்டில் முதலாவதாக வருவது தேவைகள் (அக்கறைகள்) சம்பந்தமான முரண்பாடாகும். இதில் பொருளாதார ரீதியான தேவைகள்,உளரீதியான தேவைகள்,செயன்முறை ரீதியான தேவைகள் போன்ற காரணிகளால் இந்த முரண்பாடு ஏற்படுகிறது.உண்மையான முரண்பாட்டில் இரண்டாவதாக வருவது கட்டமைப்பு சம்பந்தமான முரண்பாடாகும். இம்முரண்பாடு ஏற்படக் காரணம்:  

* ஏதாவது அமைந்துள்ள முறைமை 

* காரியங்களின் பொறுப்புக்கள் பற்றிய வரையறை  

* காலம் பற்றிய வரையறை. 

* பூகோள ரீதியானதும் பௌதிக ரீதியானதுமான தொடர்புகள்.  

* சமனற்ற அதிகாரங்களும் வழங்களும். போன்ற காரணங்களால் இம்முரண்பாடுகள் ஏற்படுகின்றன. 

3) போலியான முரண்பாடுகள்: 

இம்முரண்பாட்டில் முதலாவதாக வருவது தொடர்புகள் (உறவு) சம்பந்தப்பட்ட முரண்பாடுகளாகும். இவ்வகையான முரண்பாடு சமூகத்தில் ஏற்படக் காரணம், 

*தீவிர உணர்ச்சிகள் இருத்தல்  

*தவறாக நினைப்பதும் காண்பதும் 

*பலவீனமான தொடர்புகள்  

*திரும்பத்திரும்ப நடக்கும் தீவிர நடத்தைகள் போன்ற விடயங்களாகும். 

போலியான முரண்பாட்டில் இரண்டாவதாக வருவது தகவல் சம்பந்தமான முரண்பாடாகும். இம்முரண்பாடுகள் ஏற்படக் காரணம் வருமாறு: 

தகவலில் பற்றாக்குறை,பிழையான தகவல்கள், தகவல் பற்றிய பல்வேறு கருத்துக்கள், பல்வேறு மதிப்பீட்டு முறைகள் போன்றனவாகும். 

போலியான முரண்பாட்டில் மூன்றாவதாக வருவது விழுமியம் (ஒழுக்கவிதி) சார்ந்த முரண்பாடுகளாகும். இம்முரண்பாடு ஏற்படக் காரனம், அன்றாடம் நிகழும் ஒழுக்க விதிகள், இறுதியான விடயங்கள் சார்ந்த ஒழுக்க விதிகள், சுயமான விளக்கங்கள் பற்றிய ஒழுக்க விதிகள் இதிலடங்கும். இந்த முரண்பாடுகளில் உண்மையான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு மாற்று வழி இருந்தால் மட்டும் வேறு ஒரு தீர்வைப் பெறலாம் .ஆனால் போலியான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு மாற்று வழி தேவையில்லை. என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

முரண்பாடுகள் அல்லது பிணக்குகள் ஏற்படும்போது சில நன்மைகளும் ஏற்படுகின்றன. அவை வருமாறு:  

சலுகைகளையும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம், அனுபவங்கள் ஏற்படும், பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும், சரியான திசைக்கு கொண்டு செல்ல முடியும். 

முரண்பாட்டில் ஏற்படுகின்ற நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாக ஏற்படுகின்றன. அவை வருமாறு. 

உறவுகள் விரிசலடையும்,சொத்துக்கள், உயிர்கள் அழியும்,உள ரீதியான பாதிப்பு ஏற்படும், இனமுரண்பாடு ஏற்படும்,கொலை கொள்ளை ஏற்படும்,அன்றாட விடயங்கள் பாதிக்கப்படும். 

பொதுவாக முரண்பாடுகளில் பங்கு கொள்ளும் ஐந்து பேர் வருமாறு: 

ஊக்குவிப்பவர்,பரிந்துரைப்பவர்,ஆராய்ச்சி செய்பவர்,வற்புறுத்துபவர், நடுநிலையாளர் (மத்தியஸ்தர்)  

முரண்பாடுகளை தீர்க்கும் போது ஒரு மத்தியஸ்தர் தரப்பினரிடையே செய்யக் கூடாத விடயங்கள் பல உள்ளன. அவை வருமாறு: பட்டப் பெயர் சூட்டுதல், கட்டளையிடுதல், அச்சுறுத்தல் நல்லது கெட்டதை எடுத்துக்காட்டுதல்,எச்சரித்தல்,கலந்துரையாடல்,கடினமான முறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் கருத்துக்களை கூறுதல், நபர்களையும் பிரச்சினைகளையும் பிரிக்காமல் இருத்தல் போன்றவையாகும். இவற்றை எந்தவிதத்திலும் மத்தியஸ்தர் பிரயோகிக்கக் கூடாது. மத்தியஸ்தர் சமய ஒழுக்கவிழுமியங்களைக் பின்பற்றி நடக்கும் ஒரு முன்மாதிரி நபராக இருக்க வேண்டும். அந்தவகையில் மத்தியஸ்தர்களுக்கான ஒழுக்கநெறிகள் வருமாறு: 

கௌரவத்தையும் ஒழுக்கத்தைப் பேணி கொள்ளுதல்,செயலமர்வில் வழங்கப்பட்ட பயிற்சியின்படி நடந்து கொள்ளுதல், தரப்பினருடன் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல், தரப்பினர் தீர்மானம் எடுக்கும் உரிமைகளுக்கு மதிப்பளித்தல்,தரப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல், எடுப்பான தோற்றத்தில் காட்சியளித்தல்,தீங்கிழைக்கும் நடத்தைகளிலிருந்து தவிர்த்தல்,தனிப்பட்ட இலாபங்களை எதிர்பார்க்காது இருத்தல் என்பனவாகும். 

மத்தியஸ்தரின் பண்புகள் வருமாறு: 

நேரான சிந்தனை, இரகசியம் பேணுதல்,செவிமடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல்,சமயோசித புத்தி,நல்ல குணம்,முன்மாதிரியானவர். 

மத்தியஸ்தர் ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டிய தொடர்பாடல் திறன்கள் வருமாறு: 

தரப்பினரின் கூற்றை கவனமாக செவிமடுக்கும் திறன்,மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் திறன்,நபரில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக செய்தி வழங்கும் திறன்,விமர்சனத்துக்கு முகம் கொடுக்கும் திறன். 

மத்தியஸ்தர் முரண்பாட்டைத் தீர்க்கும் போதும் செய்யக் கூடாதவை வருமாறு: 

விமர்சித்தல் பட்டப் பெயர் வைத்தல்,தேவையற்ற விதத்தில் பாவிப்பதற்கான வர்ணனை, 

கட்டளையிடல், பயமுறுத்தல் நல்லது கெட்டதை காட்டுதல்,தேவையற்ற கேள்விகள் கேட்டல் என்பனவாகும். 

எனவே ஒவ்வொரு மனிதனும் அவரவர் சமயங்கள் போதிக்கின்ற சமய விழுமியப் பண்புகளை கடைப்பிடித்து நடந்தால் சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனிதனாக வாழ முடியும். சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒழுக்க விழுமியங்கள் அன்பு ,சாந்தம், நேர்மை, ஒழுங்கு முறை ,அகிம்சை சிநேகபூர்வம், காருண்ணியம், சமத்துவம் விட்டுக் கொடுத்தல், மற்றவரை மதித்தல், உதவுதல், இரக்கம் காட்டுதல், இன்சொல் பேசுதல் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்கின்ற விழுமிய பண்புகளை் ஒவ்வொருவரும் மதித்து நடந்தால் சமூகத்தில் முரண்பாடு வருவதைக் குறைக்கலாம்.

இஸ்மாயில் ஹுஸைன்தீன் (அம்பாறை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...