Tuesday, March 19, 2024
Home » போர் நிறுத்தப் பேச்சுக்கு மத்தியிலும் காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படை வீதிகளில் சண்டை

போர் நிறுத்தப் பேச்சுக்கு மத்தியிலும் காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படை வீதிகளில் சண்டை

ஹமாஸ் தலைவர் ஹனியே எகிப்து விரைவு

by Gayan Abeykoon
December 21, 2023 7:16 am 0 comment

போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காசாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான கான் யூனிஸில் இஸ்ரேலிய படைகள் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நேற்று (20) வீதிகளில் கடும் சண்டை வெடித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான வாக்கெடுப்பை ஐ.நா பாதுகாப்புச் சபை மேலும் ஒரு தினத்திற்கு ஒத்திவைத்த நிலையில், அமெரிக்க நேரப்படி நேற்று அந்த வாக்கெடுப்பு இடம்பெறவிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் கொண்டுவந்த நகல் தீர்மானத்தின் மீது கடந்த திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தபோதும் பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளிடையே உடன்பாடு ஒன்றை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட வாக்கெடுப்பு மீண்டும் புதன்கிழமை வரை பிற்போடப்பட்டது. குறிப்பாக போர் நிறுத்தம் பற்றிய சொற்பிரயோகத்திற்கு அமெரிக்கா உடன்பட மறுத்து வருகிறது. ஏற்கனவே போர் நிறுத்தம் மீதான பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாகக் கூறி காசா மீது இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்கள் அந்தப் பகுதியில் பேரிழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே பட்டினி அதிகரித்திருப்பதோடு பெரும் எண்ணிக்கையானவர்கள் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20,000ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் தெற்கு காசா நகரான கான் யூனிஸின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே கடும் மோதல் இடம்பெற்று வருவதாக குடியிருப்பாளர் தெரிவித்துள்ளனர்.

நகரில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று நேற்று அதிகாலையிலும் காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேலின் சரமாரி வான் தாக்குதல்கள் தொடர்ந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாம் மீது இடம்பெற்ற கடும் தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதோடு சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உயிரிழந்திருப்பதாக வபா கூறியது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை காசாவில் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர். காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் மனிதாபிமான நிலைமை அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெகன் சாபகைன் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளார்.

“தற்போது இடம்பெற்று வரும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் போதுமான எரிபொருள் இல்லாமை காரணமாக உதவி விநியோகங்கள் மேலும் கடினமாகி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தலைவர் எகிப்தில்

மேலும் பணயக்கைதிகளை விடுவிக்கும் மற்றொரு போர் நிறுத்தத்திற்கு தயார் என இஸ்ரேல் அறிவித்த நிலையில், காசாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒன்றுக்காக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று (20) எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

காசா பகுதிக்கான உதவி விநியோகங்கள் தடைப்பட்டு பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தம் அகதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் தலைவர் ஹனியே உயர்மட்ட தூதுக் குழுவொன்றுடன் எகிப்தை சென்றடைந்திருப்பதோடு அவர் அங்கு எகிப்து உளவுப் பிரிவு தலைவர் மற்றும் ஏனையவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

“கைதிகளை விடுவிப்பதற்காக உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு ஆக்கிரமிப்பு மற்றும் போரை நிறுத்துவது” தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் தொடர்ந்து 129 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பது இஸ்ரேல் அரசுக்கு தனது சொந்த மக்களிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பத் தயார் என்று இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று (19) சமிக்ஞையை வெளியிட்டது.

“பணயக்கைதிகளை விடுவிக்கும் முகமாக மற்றொரு மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் மேலதிக மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் ஹெர்சொக் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உளவுப் பிரிவுத் தலைவரை ஐரோப்பாவுக்கு இரு சுற்றுப் பயணங்களை அனுப்பி இருந்தார்.

பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தனது பிடியில் இருக்கும் இரு பணயக்கைதிகளின் படங்களை செவ்வாயன்று வெளியிட்டது. இது இஸ்ரேலுக்கும் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய உடன்படிக்கை ஒன்று பற்றி கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவாக சி.ஐ.ஏ. தலைவர் பில் பேர்ன்ஸை இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் தலைவர் டேவிட் பேர்ன் ஐரோப்பாவில் சந்தித்து பேசி இருந்தார்.

ஹமாஸ் பிடியில் இருக்கும் மூன்று டஜனுக்கும் மேலான பணயக்கைதிகளுக்கு பகரமாக காசாவில் குறைந்தது ஒரு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாகத் தெரியவருகிறது.

எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவோடு கட்டாரின் மத்தியஸ்தத்தில் காசாவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஓரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 240 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் 80 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை கடந்த இரண்டரை மாதங்களில் நான்காவது முறையாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் அமிரப்துல்லாஹியான் நேற்று முன்தினம் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு அவர் ஹமாஸ் தலைவர் ஹனியேவை சந்தித்து காசா மற்றும் மேற்குக் கரை நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இஸ்ரேலின் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள் மற்றும் அது காசாவில் நிகழ்த்தும் போர்க் குற்றங்களுக்கு மத்தியிலும் போர்க் களத்தில் பலஸ்தீனர்கள் உறுதியாக உள்ளனர் என்று இதன்போது ஹனியே தெரிவித்துள்ளார்.

“இந்த வழியில் எதிர்ப்பை ஒழித்து வெள்ளைக் கொடியை உயர்த்தச் செய்ய முடியும் என்று சியொனிஸவாதிகளும் அதன் கூட்டாளிகளும் நம்புகின்றனர்” என்று தெரிவித்த ஹனியே, “எப்படி இருந்தபோதும் இந்த எதிர்ப்பு போர்க்களத்தில் இன்னும் உறுதியாகவும் துரிதமாகவும் உள்ளதோடு 75 நாட்கள் நீடிக்கும் இஸ்ரேலிய குற்றங்கள் மற்றும் கூட்டுப் படுகொலைகளுக்கு மத்தியிலும் சியொனிஸ அரசுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது” என்றார்.

முன்னதாக கடந்த மாதம் ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் டெஹ்ரானில் வைத்து ஹனியேவை சந்தித்திருந்தார்.

இஸ்ரேல் கப்பலுக்குத் தடை

காசா போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தல் நீடித்து வருவதோடு, குறிப்பாக தெற்கு லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் எல்லையில் இஸ்ரேலிய படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

எல்லைப் பகுதியில் இரு மேலதிக படையினருக்கு காயத்தை ஏற்படுத்திய இரு தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் செவ்வாயன்று (19) கூறியது.

மறுபுறம் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் பிரதான கப்பல் நிறுவனங்கள் பல தமது கப்பல் பாதையை திசை மாற்றி இருப்பதோடு இந்தத் தாக்குதல்களை கையாள்வதற்கு பன்னாட்டு இராணுவ கூட்டமைப்பு ஒன்றை அமெரிக்கா கடந்த திங்களன்று அறிவித்தது.

இந்நிலையில் தமக்கு எதிராக எந்த நாடேனும் செயற்பட்டால் செங்கடலில் அதன் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என்று ஹூத்திக்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை இஸ்ரேலிய கொடியுடனான கப்பல்களை தமது நாட்டில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று அறிவித்தார். பலஸ்தீனத்திற்கு எதிராக படுகொலை மற்றும் கொடூரத்தை நிகழ்த்தி வருவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

தவிர, மலேசிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றி இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT