அநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு | தினகரன்

அநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு

அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன், தில்சான் -நிரோஷியா தம்பதியரின் மூத்த மகளாவார். தொடரான வாசிப்பும்,கவிதைகள் மீதான இவரது தீராத பிரியமும் அவரது 14வயதில் ஒரு கவிதை தொகுதியை வெளியிடும் அளவுக்கு அவரை பக்குவப்படுத்தியுள்ளது. விசாலமான பார்வை கொண்ட இவரது கவிதைகள் ஏகத்துவதையும், மனித அவலங்களையும்,நிலையற்ற இந்த வாழ்வியலின் கூறுகளையும் அற்புதமாய் பாடிநிற்கிறது.

அநுராதபுர மாவட்டத்தின் தமிழ் கவிதை புலத்திற்கு ஒரு ஆளுமைமிக்க இளம் கவிஞர் இவரது வருகையின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.  

 சீமா ஷைரின் தனது கவிதைகளை தொகுத்து பௌர்ணமி நிலவுக்கு ஒரு அழைப்பு எனும் பெயரில் கவிதை தொகுதியை வெளியிடவுள்ளார்.  

இன்று சனிக்கிழமை (16) அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் காலை 9.30மணிக்கு சிரேஷ்ட எழுத்தாளர்,கல்வியியலாளர் கலாபூசணம் அன்பு ஜவஹர்ஷாவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.  

நிகழ்வின் பிரதம விருந்தினராக கெகிராவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபரும், எழுத்தாளருமான கெகிராவ சுலைஹா கலந்து கொள்வார். நூலின் அறிமுகத்தை எழுத்தாளர், ஆசிரியை வன்னிமகள் சப்ரினாவும், நூல் பற்றிய விமர்சனத்தை ஆசிரியை நாகூர் உம்மாவும் நிகழ்த்தவுள்ளனர். அன்றைய நிகழ்வின் சிறப்புரையை கவிஞர், எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன் நிகழ்த்தவுள்ளதோடு, ஏற்புரையையும்,நன்றியுரையையும் நூலாசிரியர் சீமா ஷைரின் நிகழ்த்துவார்.  

 அநுராதபுர தமிழ் இலக்கியபரப்பிற்கு இன்னுமொரு ஆதர்சனமாக சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஒரு அழைப்பு எனும் இந்த கவிதை நூல் அமையும் என நம்பலாம். பெரும்பான்மை சிங்கள மொழி பேசுகின்ற அநுராதபுரம் 1970 களில் இலங்கையின் தமிழ் இலக்கியப்பரப்புக்கு வெகுவாக பங்களிப்பு செய்த பிரதேசமாகும். புதிய தலைமுறை படைப்பாளிகளினால் அநுராதபுரத்து தமிழ் இலக்கியப்பரப்பின் எழுச்சியை உணர முடிகிறது.   இத்தனை இளம்வயதில் ஒரு கவிதை தொகுதியை பிரசவித்த முதலாவது கவிஞர் வடமத்திய மாகாணத்திலேயே இவர்தான் என்பது பெருமைப்பட வேண்டிய சந்தோசமான சங்கதியாகும்.    


Add new comment

Or log in with...