2019இல் அதிக நெல் உற்பத்தி எதிர்பார்ப்பு | தினகரன்


2019இல் அதிக நெல் உற்பத்தி எதிர்பார்ப்பு

2019ஆம் ஆண்டு பெரும்போக நெல் விதைப்பின் ஊடாக 2.85மில்லியன் தொன் நெல்லை உற்பத்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாக விவசாயத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 2015மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எதிர்கொண்ட வரட்சியான காலநிலையில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இவ்வருடம் நெல் உற்பத்தியை எதிர்பார்ப்பதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

2018/2019பெரும்போகத்தில் இலக்குவைக்கப்பட்ட 828,455ஹெக்டெயர் நிலப்பரப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் 743,000ஹெக்டெயரில் நெல் விதைக்கப்பட்டிருப்பதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2017/2018பெரும்போகத்தில் 643,000ஹெக்டெயரில் மாத்திரம் நெல் விதைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய வரட்சியான காலநிலையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.   அதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 42ஹெக்டெயர் நெல் வயல்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு நெல் உற்பத்தியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 18.8வீத அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.  விதை நெல்லு மற்றும் கழிவுகள் நீக்கப்பட்ட பின்னர் அரிசி ஆலைகளுக்கு 2.64மில்லியன் தொன் நெல் காணப்படும் என்றும், இதனூடாக 1.8மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் அரிசியானது 9.19மாத நுகர்வுக்குப் போதுமானதாகவிருக்கும்.  2018ஆம் ஆண்டு சிறுபோகத்தில் இலங்கை 1.4மில்லியன் தொன் நெல்லை உற்பத்தி செய்திருந்தது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவாக உள்ளது. 

இதுஇவ்விதமிருக்க படைப்புளுவின் தாக்கத்தினால் சோள உற்பத்தியில் இம்முறை வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதும் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லையென விவசாய அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார். உள்ளூர் சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சோளத்துக்கான இறக்குமதி வரி 10ரூபாவிலிருந்து 20ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. '

அது மாத்திரமன்றி சோளத்தின் விலை உள்ளூரில் குறைவாக இருக்கும் நிலையில் அதிக வரியைச் செலுத்தி சோளத்தை இறக்குமதி செய்வது வியாபாரிகளுக்கு இலாபமீட்டும் வழியாக இருக்காது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...