பண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல் | தினகரன்

பண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்

சுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நீடிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாகனம் ஒன்றை அனுப்பி வைப்பதாக 11இலட்சத்து 11ஆயிரம் ரூபா பணத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் வழங்கிய வங்கியில் வைப்புச் செய்துள்ளார். 

எனினும் சில மாதங்கள் கடந்த போதும் அந்த நபரின் தொடர்பு கிடைக்காத்தால் அவரின் தொலைபேசி இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கிலக்கம் என்பவற்றை மட்டும் யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் ஒப்படைத்து கோண்டாவிலைச் சேர்ந்தவர் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீர்கொழும்பு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்களை கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாணம் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. 

இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு நேற்றைய முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்த பொலிஸாரை அறிவுறுத்தியது.   

யாழ்.விசேட நிருபர்


Add new comment

Or log in with...