வுளூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் | தினகரன்

வுளூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள்

தொழுகையை முறையாக நிறைவேற்றும் ஒருவன் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுளூவை  நிறைவேற்றுகின்றான். இந்தச் சிறிய நற்காரியத்தின் மூலம் இவ்வுலகில் பல நன்மைகள் கிடைக்கின்றன.அது மட்டுமில்லாமல் இதற்கு இறைவன் வாரி வழங்கும் ஏராளமான நன்மைகளை அறிந்து கொண்டால் தொழுகையாளிகளை இறைவன் எந்த அளவிற்கு நேசிக்கின்றான் என்பதையும்  தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மறுமை அந்தஸ்தையும் புரிந்து கொள்ளலாம்.

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் வுளூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),  நூல்: அஹ்மத்

வுளூவைப் பேணுவதை முஃமின்களின் அடையாளமாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவங்களை அழிக்கும் வுளூ;

நாம் நம்முடைய உடல் உறுப்புக்கள் மூலம் எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். கண்கள் மூலமாக, கைகள் மூலமாக, கால்கள் மூலமாக நாம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல சிறுபாவங்களைச் செய்கின்றோம்.

செய்த பாவங்களுக்கு நாம் இறைவனிடம் மன்னிப்பு தேடுவதும் இல்லை. செய்த பல பாவங்களை உடனேயே மறந்தும் விடுகின்றோம். இறுதியில் நம்முடைய சிறுபாவங்கள் நம்மிலேயே தேங்கி நம்மை வாட்டும் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன.

ஆனால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் மிகப் பெரும் பாக்கியம் நாம் தொழுகைக்காக செய்யும் வுளூவின் மூலமாகவே நாம் உறுப்புக்களால் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்ற அற்புத அருளை இறைவன் வழங்கியுள்ளான்.

இது தொழுகை மூலம் நாம் அடையும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு "முஸ்லிமான  அல்லது "முஃமினான' (இறைநம்பிக்கை கொண்ட) அடியான்  வுளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) "நீருடன்' அல்லது "நீரின் கடைசித் துளியுடன்' முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால்  செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) "தண்ணீருடன்' அல்லது "தண்ணீரின் கடைசித் துளியுடன்' வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) "நீரோடு' அல்லது "நீரின் கடைசித் துளியோடு' வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

#அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக வுளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), நூல்: புகாரி

(மௌலவியா ஜெஸீலா (எம்.ஏ) - சில்மியாபுர)


Add new comment

Or log in with...