உபகாரம் செய்ததை சொல்லிக்காட்டாதீர் | தினகரன்

உபகாரம் செய்ததை சொல்லிக்காட்டாதீர்

இஸ்லாம் மார்க்கம் பிறருக்கு கொடுத்து உதவுவதை அதிகமாக போதிக்கிறது. ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகரித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஸக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் காண்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நம்மில் பலர் இறைவனின்  கட்டளைக்கு  கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.

தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தகையவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை நிச்சயமாக  வழங்குவான்.

ஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் விளம்பரம் செய்து தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

 ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அப்படிச் செய்பவனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும் அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -தானத்திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

மௌலவி

ஐ.எல்.எம்.நவாஸ் (மதனி)

 ஹெம்மாதகம


Add new comment

Or log in with...