பிற மதங்களுடனான உறவுகள் | தினகரன்

பிற மதங்களுடனான உறவுகள்

அல்-குர்ஆன் முன்வைக்கும் பிற மதங்களுடனான உறவுகள் பற்றிய உண்மையான சகவாழ்வு சிந்தனையை மறைக்கும் திரைகளாக தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வுகளும் மோதல்களும் அமைந்து விட்டன. நவீன காலத்தில் எதிரிகளால் பரப்பப்பட்ட இஸ்லாம் பற்றிய பீதியும் திரைக்கு மேல் திரையாக படிந்துள்ளது. எனவே சகிப்புத்தன்மைக்கும் சகவாழ்வுக்குமான இஸ்லாமிய அடிப்படைகளை அந்தத் திரைகளை தாண்டி அல்-குர்ஆனை வாசிக்கும் போதுதான் பல்லின சமூகத்தில் சகவாழ்வு என்பது குர்ஆனிய சிந்தனை ஊன்றிய விதை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அதற்கு ஒரு சாட்சியாக தோமஸ் ஆர்னோல்டு எழுதும் வரலாற்று சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். 'இஸ்லாமியப் படை அபூ உபைதாவின் தலைமையில் ஷாம் தேசத்தின் ஜோர்தான் சமவெளியில் உள்ள 'பஹ்ல்' என்ற இடத்தில் தங்கியிருந்த போது அப்பிரதேசத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரேபியர்களை விழித்து பின்வருமாறு கடிதம் எழுதினர். 'முஸ்லிம்களே பைஸாந்தியர்களை விட உங்களையே விரும்புகின்றோம்.

அவர்கள் எமது மதத்தை சேர்ந்தோராக இருப்பினும் சரியே. காரணம் நீங்கள் எங்களுடன் விசுவாசமாக நடக்கின்றீர்கள். எம்மோடு நீங்கள் மிகவும் இரக்கமாக இருக்கின்றீகள். எமக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றீர்கள். எங்கள் மீதான ரோமர்களது ஆட்சியை விட உங்களது ஆட்சி மிகவுமே சிறந்தது.' இது தான் அல்குர்ஆனிய சிந்தனை அன்று வளர்த்த சமாதான சகவாழ்வு. இந்த சம்பவத்தை குறிப்பிடும் வரலாற்றாசிரியர் ஒரு தீவிர இஸ்லாம் விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ நேரிடலாம். அது உலகின் எந்தப் பிராந்தியத்திலும் வாழலாம். ஆனால் அது வாழும் நிலம் கொள்கைக்காக வாழும் பூமியாகவே இருக்கும். அங்கே சகவாழ்வு உறவுகளின் உயிராக காணப்படும். அவ்வாறே இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி வாழ்வது அதன் மீதான மார்க்கக் கடமை என்றும் பிற சமூகங்களுடன் இணங்கி, சமாதானமாக வாழ்வதும், தாம் வாழ்கின்ற நாட்டிற்கு தம்மாலான பங்களிப்பை ஆற்றுவதும் அவர்கள் மீது உள்ள மார்கக் கடமை என்றும் அது ஆழ்ந்து நம்பும். உள்ளங்களில் விதைக்கப்பட்டுள்ள இந்த குர்ஆனிய சிந்தனை சில போது தூசி படிந்து மறைந்து காணப்படலாம். ஆனால் அது ஒரு போதும் சாவதில்லை. திரைகளைக் கிழித்துக்கொண்டு மீண்டும் சகவாழ்வு மலர்ந்து மனிதம் வாழும் என்ற நம்பிக்கை இறை விசுவாசிகளின் மூச்சாகவே உள்ளது.

பன்மைத்துவ சமூக அமைப்பை கொண்ட இலங்கை மண்ணில் தனித்துவத்தை இழந்து விடாமல் பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்வது காலத்தின் தேவையாகும்.      


Add new comment

Or log in with...