பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம் | தினகரன்


பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்

பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்-Police Officer Injured While Arresting a Drug Smuggler

ஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்

கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) பிற்பகல் 5.10 மணியளவில் கடவத்தை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முச்சக்கரவண்டியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட குழப்பகரமான நிலையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்து, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையில் காயமேற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவத்தை நகரில் உள்ள அரச மரத்திற்கு அருகில், முச்சக்கரவண்டி ஒன்றில் நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருப்பதாக, கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் 22 வயதான இஹலபியன்வில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன் போது முச்சக்கர வண்டியில் இருந்த குறித்த சந்தேகநபரின் தாய், மனைவி மற்றும் குழந்தையை பொலிசார் தங்களது கட்டுப்பாட்டில் அழைத்து வந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...