மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை | தினகரன்

மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13) மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இவருடைய மூன்று ஆண் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். பெண் பிள்ளை வீட்டில் உள்ளார். வீட்டுக்குள் சென்ற இவரை இவரின் மகள் நெடுநேரமாக காணவில்லை என்று பார்த்தபோது இவர் தூக்கில் தொங்கி இருப்பதை கண்ணுற்றார். அயலவர்களின் உதவியுடன்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது, அவரை வைத்தியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சோதித்து பார்த்தபோது இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்..

இவரின் மரணம் தொடர்பாக கல்முனைப்பற்று மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் உடலத்தை பார்வையிட்டதுடன் உடல் கூற்று பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இன்று (14) வியாழக்கிழமை காலை உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி இம்மரணம் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்டது என்று மரண விசாரணை அதிகாரிக்கு அறிக்கையிட்டார். இறந்தவரின் உறவினர்களிடம் பெற்று கொண்ட வாக்குமூலம், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஆகியவற்றின் பிரகாரம் இது தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர் - அஷ்ரப்கான்)


Add new comment

Or log in with...