பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் | தினகரன்


பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்

பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய  திருப்பம்-Murder Case Transferred from Central Camp Police

தீ மூட்டி தற்கொலையா? திட்டமிட்ட கொலையா?

மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால பகுதியில் வீட்டில் திடீர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பொலிசாரின் விசாரணையில் திருப்தி இல்லை எனத் தெரிவித்து, மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்திலிருந்து கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவிடம் விசாரணையை ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இம்மரணம் தொடர்பாக அப்போது விசாரணை நடத்திய மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொலிஸார், குறித்த பெண் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். ஆனால் இது தற்கொலை அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை என்று இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையிலும் வன்முறை இடம்பெற்றிருப்பதற்கு இடமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போதைய கல்முனை நீதவான் பயாஸ் ரஸாக் குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றபோது இறந்தவரின் தாய், சகோதரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அன்சார் மௌலானா, மிக நீண்ட காலமாக இழுபட்டு செல்கின்ற மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று நீதிமன்றிற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.

அத்துடன், இவ்விசாரணையை மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் இருந்து விடுவித்து, நியாயமான புலனாய்வு விசாரணை இடம்பெறுவதற்கு தகுந்த கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதவான் ஐ. என். ரிஸ்பான், இம்மரணம் தொடர்பான விசாரணையை கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர் - அஷ்ரப் கான்)


Add new comment

Or log in with...