Friday, March 29, 2024
Home » அதிக அக்கறை எடுத்துக்கொண்ட குவைத் மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்
இலங்கைக்கு சமூக பொருளாதார உதவிகளை நல்குவதில்

அதிக அக்கறை எடுத்துக்கொண்ட குவைத் மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்

by Gayan Abeykoon
December 21, 2023 10:54 am 0 comment

குவைத் நாட்டின் 16ஆவது மன்னரான அஷ்ஷெய்க் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ் தனது 86ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை (16) இறையடி சேர்ந்தார். இவர் வளைகுடாவின் ஸ்திரமானதும் முன்மாதிரியுமான தலைவராக அனைவராலும் மதிக்கப்பட்டார். காலஞ்சென்ற மன்னர் அஷ்ஷெய்க் ஸபாஹ் அல் அஹமட் அல் ஸபாஹ்வைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்குமுன் ஆட்சியைப் பொறுப்பெடுத்தார்.

1937 ஆம் ஆண்டு ஜூன் 25ம் திகதி குவைத் தலைநகரில் பிறந்த இவர், மன்னர் அஷ்ஷெய்க் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்வின் 5வது மகனாவார். அன்றைய அரச பணிமனையான ‘தஸ்மான் மாளிகையில்’ வளர்ந்த இவர், முபாரகியா பாடசாலையில் கல்வி பயின்றார்.

மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்வின் இறையடியெய்திய செய்தியை அரச பணிமனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு சகல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இரத்துச் செய்து அல் குர்ஆன் ஓதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. திடீரென இதய நோய்க்குட்பட்ட மன்னர், கடந்த நவம்பர் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்

மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்

மன்னர் நவாப் 2006ஆம் ஆண்டு முடிக்குரிய இளவரசராக முடி சூட்டப்பட்டு 14 வருடங்கள் பதவி வகித்தார். பின் 2020 ஆம் ஆண்டு மன்னர் ஸபாஹ் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ்வின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டின் மன்னராக அவர் பதவியேற்றார். குவைத் நாடு வளைகுடாவில் வடமேல் மூலையில் ஈராக்கையும் சவூதியையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது. இது மொத்தம் 17,818 கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டதொரு நாடாகும்.

2020 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் நாடுகளின் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு உள்ளான போது மன்னர் நவாப் தம் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். என்றாலும் இவரது 03 வருட ஆட்சிக்காலத்தில் பலமுறை ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

குவைத்தானது 1962 ஆம் ஆண்டு தொடக்கம் ‘பாராளுமன்ற அமைப்பை பின்பற்றி செனட் சட்ட சபை ஊடாக நிர்வாக அமைப்பை முன்னெடுத்து வருகிறது. குவைத் அரச அமைச்சர்கள் ஆளும் ஸபாஹ் குடும்பத்தினராலேயே நியமனம் செய்யப்படுகின்றார்கள். 50 உறுப்பினர்களைக் கொண்ட குவைத் மக்கள் சபையின் பிரதிநிதிகள் 04 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பால் தெரிவு செய்யப்படுகின்றனர். இங்கு பிரதிநிதித்துவ குழுக்கள் இயங்க இடமளிக்கப்பட்டுள்ள போதிலும், கட்சி அரசியலுக்கு அனுமதிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் குடும்ப ஆட்சியே குவைத்தில் இடம்பெறுகிறது

குவைத் மன்னர் யாப்பு ரீதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார். அவர் கையொப்பமிட்டால் மாத்திரமே அங்கு சட்டங்கள் செல்லுபடியாகும். அதனால் மக்கள் சபையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்துக்கும் மன்னரின் கையொப்பம் பெறப்படுவது அவசியம்.

இலங்கை – குவைத் நட்புறவு

இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் குவைத் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவி, ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது. அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட 2011 களில் குவைத் இந்நாட்டுக்கு ஆதரவு நல்கியுள்ளது. அண்மையில் மறைந்த குவைத் மன்னர் அஷ்ஷெய்க் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி நாட்டில் வாழுகின்ற மூவின மக்களுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டவர் என்பது இத்தருணத்தில் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்படுவது பொருத்தம்.

இந்நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட காலப்பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் மருந்துப்பொருட்களையும் கூட குவைத் அனுப்பி உதவியுள்ளது. அதேபோன்று நாட்டின் கல்வித்துறை மேம்பாட்டுக்கும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் கூட நிறைய உதவிகளை குவைத் நாடும் குவைத் மக்களும் வழங்கி வருகிறார்கள்.

அதேநேரம் இந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளில் ஒன்றாக குவைத் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் நாட்டின் வேலையின்மையைக் குறைப்பதற்கு குவைத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரமல்லாமல் ஏனைய சகோதர இன மக்களும் பயனடையும் வகையில் காலத்திற்கு காலம் பல்வேறு உதவிகளையும் குவைத் அரசு நல்கி வருகிறது. அந்த வகையில் வளப்பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு குவைத் அரசின் உதவியுடன் புதிய கட்டடங்கள் மற்றும் தளபாட வசதிகளும் பெற்றுக்கொடுக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். இவற்றுக்கு மறைந்த மன்னர் பேருதவியாக இருந்து செயற்பட்டார்.

உலகில் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் செல்வாக்குமிக்க நாடாக விளங்கும் குவைத், வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகமாக்கியுள்ளது. அதனால் தான் கொவிட் 19 உலகத்தை தாக்கிய காலத்திலும் அதன் பின்னரும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்ற நாடு குவைத் என்றால் அது மிகையாகாது.

அஷ்ஷெய்க்
எம்.ஏ.ஏ நூருல்லாஹ் (நளீமி)
பணிப்பாளர், அல் ஹிமா இஸ்லாமிய
சேவைகள் அமைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT