தண்டனை மட்டும் தீர்வைத் தருமா? | தினகரன்

தண்டனை மட்டும் தீர்வைத் தருமா?

போதைப் பொருள் பாவனையிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பது என்பது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சமூகத்தை மீட்பதாயின் கடுமையான தண்டனையை வழங்க வேண்டுமென்பது அநேகமானோரின் கருத்தாகும். அவ்வாறு செய்யாமல் அக்ெகாடிய குற்றங்களை முற்றாக களைய முடியாது என்பதே அவர்களது எண்ணம். அதனை நோக்கும் போது உண்மையாகவும் தோன்றுகின்றது. கடும் தண்டனை ஏதோவொரு வழியில் குற்றங்களைக் குறைக்கின்றது.

அண்மையில் இது தொடர்பாக கடுமையாக அதிகாரத்தைப் பயன்படுத்திய நாடு பிலிப்பைன்ஸ் ஆகும். போதைப் பொருள் மாபியாக்களைக் கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பயன்படுத்திய வழிமுறை வழக்கு விசாரணை இல்லாமல் மரணதண்டனை வழங்க அனுமதி அளித்ததாகும். அதனை 2016ம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி செயல்படுத்தினார்.

தென்கொரிய வியாபாரியொருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதால் குழப்பமுற்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, சிறிது காலம் 2017 ஜனவரி 31ம் திகதி வரை சிறிது ஓய்வு அளித்தார். அவ்வேளையில் மாத்திரம் 53, 025 பேர் கைது செய்யப்பட்டதுடன் 7, 069.095 வீடுகள் சோதனையிடப்பட்டன. அப்போது 1,179, 462 பேர் தங்களை கொன்று விடுவார்கள் என்று எண்ணி பொலிஸாரிடம் சரணடைந்தார்கள். ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் இதன் மூலம் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதாகும்.

தென்கொரிய வியாபாரியொருவர் கொல்லப்பட்டதன் காரணமாக தனது யுத்தத்துக்கு தற்காலிக நிறுத்தத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, முதலில் பொலிஸார் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

சில வார இடைநிறுத்தத்துக்குப் பின்னர் பெப்ரவரி 27ம் திகதி மீண்டும் போதைப் பொருளுக்கு எதிரான யுத்தம் தொடங்கியது. 27 நாட்களில் பொலிஸார் சரியான பாதைக்கு வந்து விட்டார்கள் என கூறினால் அது உலக அதிசயமாகும். அது பற்றிய தகவல்கள் எம்மிடமில்லை. பொலிஸார் சரியான பாதைக்கு வந்தார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. தனது பயணத்தை தொடர்ந்து செல்ல பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி நினைத்தார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருளை தடுப்பது இலகுவான விடயமல்ல. இன்னும் பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் மாபியா செயல்பட்டு வருகின்றது.

போதைப் பொருள் பாவனையை தடுக்க சரித்திரத்திலேயே முதற்தடவையாக கடும் நடவடிக்கை எடுத்த நாடு பிலிப்பைன்ஸ் அல்ல. நாம் யாருமே நினைத்திராத நாடான அமெரிக்காவே அதுவாகும்.

அமெரிக்காவில் லால் வேகாஸ் சூதாட்டத்துக்குப் பெயர் பெற்றது. அங்கு பெறுமதி வாய்ந்த தொல்பொருள் காட்சிசாலையொன்றுண்டு. அதன் பெயர் 'மொப் மியூஸியம்'. அங்கு அமெரிக்க மாபியாவின் ஆரம்பம், அதன் வளர்ச்சி, முடிவு என்பன பற்றிய விடயங்கள் காணப்படுகின்றன. சாட்சி அறிக்கைகள், ஒளி நாடாக்கள் மாத்திரமல்ல மாபியாக்கள் பாவித்த ஆயுதங்கள் உட்பட வேறு பொருட்களும் காணப்படுகின்றன.

அமெரிக்காவில் மாபியா ஆரம்பமாகிறது 1920 களில் அங்கு முற்று முழுதாக மதுபாவனை தடை செய்யப்பட்ட போதாகும். அதனால் மறைமுகமாக போதைப் பொருள், தயாரிப்பு, விற்பனை என்பன தொடங்கின. அதற்கான பாதுகாப்பை வழங்க ஆயுதம் தாங்கிய கோஷ்டியினர் தேவைப்பட்டார்கள். அதன் பின்னர் ஒரு தலைவரின் கீழ் மாபியாக்கள் கொண்டு வரப்பட்டு நாடு பூராவும் போதைப் பொருள் கடத்தல் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையான இடங்களில் மாபியாக்களால் மக்கள் இலஞ்சம் வழங்கியும், விலைக்கும் பெறப்பட்டனர்.அவ்வாறு செய்ய முடியாத இடங்களில் கொலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு பொலிஸாரையும், அரசியல்வாதிகளையும் சமூகத்தில் மக்கள் பலரையும் பலிகொண்டார்கள். பயம் காரணமாக மாபியாவிற்கு எதிராக எதனையும் கூற மக்கள் விரும்பவில்லை. அதனால் மாபியாவை ஒழிப்பது சிரமமான விடயமாகியது.

இறுதியாக அமெரிக்கா மதுவுக்கான தடையை நீக்கியது. தடையை நீக்கியதால் மாபியாக்களுக்கு வேறு வழிகளை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்கள் அதன் பின்னர் தடை செய்யப்பட்டிருந்த சூதாட்டத்தை தமதாக்கிக் கொண்டார்கள். பின்னர் அரசாங்கம் சூதாட்டம் தொடர்பான சட்டவிதிகளை தளர்த்திக் கொண்டது. அதன் காரணமாக லாஸ் வேகாஸ் நகரமே சூதாட்ட நகரமாகியது. அதனால் மாபியாக்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவர்கள் உடனே தடை செய்யப்பட்டிருந்த போதைப் பொருள் வியாபாரிகளுக்கு உதவுவதன் மூலம் தங்களது இருப்பை மீண்டும் உறுதி செய்து கொண்டார்கள். அமெரிக்காவின் பல பிராந்தியங்களிலும் போதைப் பொருள் தடை நீக்கப்பட்டதால் மாபியாக்கள் நிலைகுலைந்து போனார்கள். அந்நிலைமையில் கட்டுப்படுத்துவது அரசாங்கத்துக்கு இலகுவாகிப் போனது.

இந்த நீண்ட கதையை கூறியது தடைகள் மூலம் அநேகமானவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளவர்களின் கண்களைத் திறப்பதற்காகும். அமெரிக்கா மாபியாவை ஒழித்தாலும் இன்று போதைப் பொருள் பாவனையும் சூதாட்டமும் அதிகரித்தே காணப்படுகின்றன. அதனால் பெற்றுக் கொண்ட உண்மையான வெற்றியென்ன?

மக்களுக்கு மரண தண்டனை வழங்கி போதைப்பொருள் ஒழிப்பை மேற்கொள்ள பிலிப்பைன்ஸால் முடிந்துள்ளதா? பிலிப்பைன்ஸ் நாட்டின் போதைப் பொருள் மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்களின்படி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 10 மாதங்களுக்குப் பின்னர் குறைந்த விலைக்கு மணிலா நகரில் அதனை விலைக்கு வாங்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு தடுக்க முடியாமைக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகின்றது. பொலிஸ் அதிகாரிகளின் அனுசரணையைப் பெற்றுள்ள போதைப் பொருள் விற்பனை முன்னரை விட அதிகரித்துள்ளது. அவர்களிடையேயான போட்டியே வியாபாரத்துக்கு தடையாக விளங்குகின்றது. இவையனைத்தும் கூறுவது என்னவென்றால் சட்டத்தை கடுமையாக செயல்படுத்தினாலும் அதன் பிரதிபலன் நாம் எண்ணுவதை விட மாறுபட்டு இருக்கலாம் என்பதாகும்.

சட்டத்தால் செய்ய முடியாததை மதத்தால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எம்மிடையே உண்டு. தற்போது மதத்தை தீவிரமாக அனுஷ்டிக்கும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இரவு பகலாக மதம் சார்ந்த உபதேசங்களை வழங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் எத்தனை? ஆனாலும் போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்னவென்றால் அதற்கு தூண்டப்படுதல் மனித சுபாவம் என்றாலும் அதையும் தவிர சமூகக் காரணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அநேகமானோரின் வாழ்க்கையில் அன்பு காணப்படுவதில்லை. சிலருக்கு வாழ்க்கையை வாழ கட்டுப்பாடுகள் தடைகள் ஏராளம். அதைத் தவிர கலாசாரம் சார்ந்த வாழ்க்கையும் மக்களுக்கு இல்லை. இசையை ரசிக்க, சித்திரம் வரைய, கவிதை எழுத, நடனமாட, நடிக்க, விளையாட்டில் ஈடுபட அநேகமானோருக்கு நேரமில்லை. அபூர்வமாக ஒருவர் இருவர் அதனைச் செய்தாலும் பாராட்டி ஊக்குவிக்க யாருமில்லை. ஆகவே தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய போதையை நாடுகின்றனர்.

இவை அனைத்துக்கும் பின்னால் எமது கல்வி முறையில் உள்ள தவறுகளும் காரணமாகும். அரசியல், ஏழ்மை, மதத்தின் கறுப்பு நிழல், காலத்துக்குப் பொருந்தாத கலாசாரங்கள் என்பனவே எமது சமூகத்தில் காணப்படுகின்றன. மேற்கூறிய காரணங்களாலும் வேறு பொதுக் காரணங்களாலும் பலர் போதைக்கு அடிமையாகின்றார்கள்.

அவற்றுக்கு விடை காண வேண்டியது மரணதண்டனை மூலமல்ல. வைத்திய விஞ்ஞானம் மூலமாகத்தான் விடை காண வேண்டும். சிலர் ஆர்வம் காரணமாகவும் சிலர் குரோதத்தை வெளிக்காட்டும் அடையாளமாகவும் போதைப் பாவனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான விடை மிகவும் திறந்த மனத்துடன் கருத்துகளை வெளியிடும் சூழலை உருவாக்குவதாகும்.

அதிகமாக இன்று போதைக்கு அடிமையாகியிருப்பது இளைஞர் சமுதாயமே. அவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் குறைவு. வர்த்தக வசதிகள் குறைவு, அதற்கான தடைகளும் அதிகமாகும். அதனால் அநேகமானோர் விரக்தியில் உள்ளார்கள்.

சமூகத்தால் போதையை விதைக்க இவ்வாறான வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன. அதிக சிரமமின்றி போதைப் பொருளை விற்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு உரிய இடத்திலிருந்து ஒத்துழைப்பும் பாதுகாப்பும் குறைவில்லாமல் கிடைக்கின்றது.

விநியோகிக்கும் நபர்களை அரக்கர்களாகக் கருதி அவர்களை கட்டுப்படுத்துவது மற்றும் அழிப்பதால் மக்கள் பாராட்டை பெற முடியுமென்றாலும், தேவையை இல்லாமல் செய்து விநியோகத்தர்களை அழிப்பது இன்னொரு வழியாகும்.

இரண்டாவது வழி முதலாவதைப் போன்று இலகுவானதல்ல. நாம் முன்னர் கூறிய அறியாமைக்கு மேலதிகமாக இந்த புரிந்துணர்வும் போதைப் பொருள் தொடர்பாக தற்போதைய நிரந்தரமின்மைக்கு காரணமாகும்.

அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு எமக்கும் உள்ளது. நாம் முன்னர் குறிப்பிட்ட சமூக விடயங்களை அர்ப்பணிப்புடன் தீர்க்க பங்களிப்பு செய்ய வேண்டும்.

நிஸாந்த கமலதாச
(தினமின)


Add new comment

Or log in with...