ஹோட்டல் உணவுக்குள் புழு; விசாரணைக்கு உத்தரவு | தினகரன்

ஹோட்டல் உணவுக்குள் புழு; விசாரணைக்கு உத்தரவு

ஹோட்டல் உணவுக்குள் புழு; விசாரணைக்கு உத்தரவு-Worms in Food Served at CCC Slave Island
வைப்பக படம்

கொழும்பு கொம்பனித் தெருவில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிரபல பல்பொருள் வர்த்தகத் தொகுதியிலுள்ள கடையொன்றில் பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவு விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் மேல் மாகாண ஆளுநரும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

கடந்த ஞாயிறன்று (10) குறித்த பல்பொருள் வர்த்தக தொகுதியிலுள்ள உணவு விடுதியில் உணவு வாங்கிய ஒருவர் எதிர்பாராத ஆச்சரியத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் ஓடுவதை கண்ட அவர் கடை அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் புட் ஸ்டூடியோ தனியார் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தமது நிறுவனத்தின் கீழுள்ள குத்தகை பங்காளியான குறித்த உணவு விடுதியை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளது. நடந்த கவலைக்குரிய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற் கொண்டதாவும் தமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான சேவையாற்ற இருப்பதாகவும் புட் ஸ்டூடியோ குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கருத்துவெளியிட்ட மேல்மாகாண சபை ஆளுநர் அஸாத் சாலி, இந்த சம்பவம் குறித்து சுகாதார அதிகாரிகளை அனுப்பி தேவையான விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

குறித்த பல்பொருள் வர்த்தக நிலையத்தில் உள்ள உணவு விடுதிகளில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படும் நிலையில் அவற்றில் புழு போன்றவை இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. (பா)


Add new comment

Or log in with...