பூச்சிகள் இன்றேல் மனிதனும் இல்லை! | தினகரன்

பூச்சிகள் இன்றேல் மனிதனும் இல்லை!

மனித குலத்தை விவசாயம் அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல.

இயற்கையின் சமநிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது.

உலகெங்கும் பூச்சி இனம் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40சதவீதம் வியத்தகு வழியில் குறைந்து வருவதாக எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வு முடிவானது ப​ேயாலஜிக்கல் கன்சர்வேஷன்' என்ற சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது.

நம் வாழ்வில் அன்றாடம் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள் போன்றவை பாலூட்டிகளை விட 8மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாக கூறுகிறது அந்த ஆய்வு.

ஆனால் அதே நேரம், ஈ மற்றும் கரப்பான் பூச்சிக்கள் பெருகி வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த பூச்சிகளின் அழிவுக்கு விவசாயமும் மறைமுக காரணமாகிறது.அதனை நம்பித்தான் ஆக வேண்டும்.

தீவிரமாக விவசாயம் செய்வது,அதற்காக அதிகளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை இந்த அழிவுக்கு காரணமென சுட்டிக் காட்டுகிறது ஆய்வு.

பூச்சிகள் தானே? அவை அழிந்தால் என்ன? என்ற எண்ணம் எமக்கு இருந்தால் அதனை மாற்றிக் கொள்வது நல்லது.

மனித இனம் இந்த பூமியில் இருக்க வேண்டுமானால், பூச்சிகள் இருக்க வேண்டும். மனித இனம் உள்ளிட்ட பிற உயிரிகளின் வாழ்வுக்கு பூச்சிகள் இருப்பது மிக முக்கியம்.உணவுச் சங்கிலியிலும், மகரந்தச் சேர்க்கையிலும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பறவைகள், வெளவால் மற்றும் சில பாலூட்டிகளுக்கு பூச்சிகள்தான் உணவு. உலகெங்கும் உள்ள 75பயிர் வகைகளின் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்க, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்த பூச்சி இனங்கள் தேவை.

இந்த ஆய்வு மட்டுமல்ல, இதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆய்வுகளும், பூச்சி இனங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில்.

இந்த ஆய்வானது, கடந்த 13ஆண்டுகளில் உலகெங்கும் செய்யப்பட்ட 73ஆய்வு முடிவுகளை பரிசீலித்துள்ளது.

உலகெங்கும் அனைத்து பகுதிகளிலும் 40சதவீத பூச்சிகள் அழியும் தறுவாயில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளார் ஃப்ரான்சிஸ்கோ, "தீவிரமாக விவசாயம் மேற்கொள்வதால், நகர்மயமாக்கலால், காடுகள் அழிக்கப்படுவதால், பூச்சிகளின் வசிப்பிடங்கள் அழிந்து விட்டன. இவைதான் பூச்சிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்" என்கிறார்.

இரண்டாவது காரணம் பூச்சிகொல்லிகள்; மூன்றாவது காரணம் நோய்க்கிருமிகள்; நான்காவது காரணம் பருவநிலை மாற்றம் என்கிறார் அவர்.

பூச்சிகள் அழிந்தால் வேறென்ன நடக்கும்? மனித இனம் அழியும் என்பதுதான் சுருக்கமான பதில்.

சுற்றுச்சூழல் சமநிலைக்கும், உணவு வளையத்திற்கும் பூச்சிகள் மிகவும் இன்றியமையாதவை. பூச்சி இனத்தின் அழிவானது நேரடியாக மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கும்.

தீவிரமான விவசயாமும் பூச்சி இன அழிவுக்கு ஒரு காரனம் என்று சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

நாம் விவசாயம் செய்யும் முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. பலவிதமான செடி கொடிகள் இருக்கும் காடுகளில் எந்த பூச்சி தொந்தரவும் இல்லை.ஒற்றைப் பயிர் செய்கை பண்ணும் இடங்ககளில்தான் பூச்சி பிரச்சினை உள்ளது.

பூச்சிகொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தும் போது, தீமை செய்யும் பூச்சிகளுடன் இணைந்து அதிகளவில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிகின்றன.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு விவசாயம் செய்யும் முறையிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏனெனில் பூச்சிகளின் அழிவென்பது, மனித குலத்தை அழிவுக்கு இட்டு செல்லும்.


Add new comment

Or log in with...