சமாதான முயற்சி வெற்றி தருமா? | தினகரன்

சமாதான முயற்சி வெற்றி தருமா?

வடகொரியா அதன் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவதை வலியுறுத்தும் வகையிலான சமாதானப் பேச்சுகள் தொடர்ந்தபடி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையில் வெகுமும்முரமாக பேச்சுகள் தொடர்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புத் தொடர்வது சிறந்ததொரு நகர்வு எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான முதற் கட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமாதானப் பேச்சு கடந்த வருடம் ஜுன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 8 மாதங்களின் பின்னர் இரண்டாவது தடவையாகவும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் சமாதானப் பேச்சை முன்னெடுப்பதற்கு சாதகமான சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம்மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் இரண்டாம் கட்டச் சந்திப்பை தான் நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் இரண்டாம் கட்டச் சந்திப்பை நடத்த வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமை சிறந்ததொரு தெரிவு எனவும் கருதப்படுகின்றது.

1965ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் பாரிய இரத்தம் தோய்ந்த போர் இடம்பெற்றதுடன், இதில் பாரிய உயிரிழப்புகளும் சம்பவித்திருந்தன. அமெரிக்கர்கள் 'வியட்நாம் போர்' எனவும் வியட்நாமியர்கள் 'அமெரிக்கப் போர்' எனவும் இதனை அழைத்தனர். இப்போரின் போது, வியட்நாம் பாரிய அழிவைச் சந்தித்திருந்தது. இதன் பின்னர் இவ்விரு நாடுகளும் தமது உறவை சிறந்த முறையில் மீளக்கட்டியெழுப்பின.

அத்துடன், அமெரிக்க –வியட்நாம் போருக்குப் பின்னர் நவீன பொருளாதாரத் திட்டம் மற்றும் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வியட்நாம் முன்மாதிரியாகக் காணப்படுவதுடன், அமெரிக்காவுடன் வியட்நாம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. வடகொரிய –அமெரிக்கத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக்கு வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமை சிறந்ததொரு தெரிவு என சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனைத் தென்கொரிய ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும் வெள்ளை மாளிகை அதிகாரியொருவரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க –வியட்நாம் போருக்குப் பின்னர் வியட்நாமில் காணப்படும் நவீன பொருளாதாரத் திட்டம் மற்றும் அரசியல் சீரமைப்புத் திட்டத்தை, வடகொரியாவும் அதன் அணுசக்தித் திட்டத்தைக் கைவிட்டு பின்பற்றிச் செல்ல வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க –வடகொரியத் தலைவர்களின் இரண்டாம் கட்டச் சந்திப்புக்கு வியட்நாம் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

மேலும், 1953ஆம் ஆண்டு இரு கொரியாக்களுக்கு இடையிலான போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, தனது செயற்பாடுகளை தன்னிச்சையாக முன்னெடுத்து வந்தது.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளினால் அந்நாட்டின் மீது ஆத்திரமடைந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் முரண்பட்டதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் அவதூறான வார்த்தைப் பிரயோகங்களையும் பரிமாறி வந்தனர்.

அத்துடன், வடகொரியாவின் அச்சுறுத்தலான நடவடிக்கையினால் அமெரிக்கா மாத்திரமின்றி, தென்கொரியா உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளும் அதிருப்தியடைந்திருந்ததுடன், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைக் கைவிடுமாறும் சமாதானப் பேச்சுக்கு முன்வருமாறும் வடகொரியாவை வலியுறுத்தியிருந்தன. இதற்கிடையில் வடகொரியாவின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

இந்நிலையில் வடகொரியா அவ்வப்போது நடத்தி வந்த ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைக் கைவிட்டு சுமுகமான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பது அமெரிக்கா, தென்கொரிய உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேசத்தின் எதிர்ப்பலைகளை எதிர்நோக்கிய வடகொரியா, ஒருவழியாக அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்த நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமாதானப் பேச்சுத் தொடர்கின்றது.

வடகொரியா அதன் ஏவுகணைச் சோதனை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிட வலியுறுத்தும் வகையில் சிங்கப்பூரில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் நடைபெற்ற முதற் கட்டச் சந்திப்பு அமைந்திருந்தது. இச்சந்திப்பு குறிப்பிடத்தக்களவு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கியது.

இச்சந்திப்பில் அணுசக்தித் திட்டத்தை ஒழிப்பதாக இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டாலும், எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான தகவல்களை இரு தரப்பினரும் பரிமாறவில்லை.

ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு வடகொரியா பாரிய அல்லது நீண்ட கால அச்சுறுத்தலாகக் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டாலும், வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடுவதாக ஒருபோதும் உறுதியளிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது. இதேவேளை, வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதுடன், சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் அவற்றை முழுமையாக அழிக்க வடகொரியா முன்வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.

இதற்கிடையில் வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதாகவும், பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சு நீடித்து நிலைக்குமா, வியட்நாமை வடகொரியா முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றிச் செல்லுமா என்பது கேள்விக்குறியே.

மேலும், வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமானால், அமெரிக்க –வடகொரிய மோதலுக்கு வழிவகுப்பது மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் ஸ்திரமற்ற நிலைமை உருவாகும். இதனால் உடனடியான பாதிப்பை பொதுமக்களே எதிர்கொள்வார்கள். எனவே, நன்மை கருதி வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளைக் கைவிட்டு நடந்து கொண்டால் சர்வதேசத்துக்கு ஆபத்தில்லை என்பது தெளிவு. அத்துடன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுடன் வடகொரியா சமாதானப் போக்கை கடைப்பிடித்தால், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வடகொரியா ஏனைய நாடுகளுடன் ஒத்துப் போய், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் வியட்நாமை போன்று வளர்ச்சி காணவும் உதவும்.

ஆர். சுகந்தினி


Add new comment

Or log in with...