அரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை | தினகரன்

அரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை

அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால் முன்வைக்கப்பட்டு வரும் பிரசாரங்களில் எந்தவித உண்மையும் கிடையாதென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.   

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் நாட்டில் அனைத்து மக்களையும் ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டி ஹந்தான பிரதேசத்தில் இடம் பெற்ற பெளத்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.   தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ,    உத்தேச அரசியல் திருத்தங்கள் மற்றும் அதன் அவசியம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச, தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்றத்திலுள்ள 225உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அதனை கண்காணிக்கும் வகையில் ஒரு குழுவும் அமைக்கப்படடது . 

உத்தேச அரசியல் திருத்தம் மூலம் பெளத்த மதத்திற்கு எந்தவொரு குறைபாடும் ஒருபோதும் ஏற்படாது. ஏற்கனவே பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள கௌரவம் எந்த வகையிலும் குறையாது.அதில் மாற்றங்கள் இடம்பெற நாம் துணை நிற்கமாட்டோம்.  

அதே போன்று நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள், மதங்கள் அவர்களின் தனித்துவ கலாசாரங்களுக்கும் மதிப்பளிக்கப்படும். அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வழி வகுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சுதந்திரத்தின் பின்னர் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு, தீர்வுகள் உருவாக்கப்படாமையாலே இலங்கையில் யுத்தம் ஒன்றை சந்திக்க நேர்ந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

எம்.ஏ .அமீனுல்லா 


Add new comment

Or log in with...