ஏலத்தில் விலைபோகாத ஹிட்லரின் ஓவியங்கள் | தினகரன்

ஏலத்தில் விலைபோகாத ஹிட்லரின் ஓவியங்கள்

ஹிட்லர் கைவண்ணத்தில் உருவானதாகக் கூறப்படும் 5 ஓவியங்களும் அவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் நாற்காலியும் ஏலத்தில் விலைபோகவில்லை.

ஜெர்மனியின் நூரெம்பேர்க் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த ஏலத்தில் நாஜிக்களின் ஞாபகச் சின்னங்கள் விற்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே இந்த ஏல விற்பனை தோல்வி அடைந்துள்ளது. நகரின் மேயர் உல்ரிச் மாலி ஏலத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அது ரசனையற்றது என்று கூறியிருந்தார். ஓவியங்களின் ஆரம்ப விலை சுமார் 20,000 டொலர்களாக இருந்தது.

ஹிட்லரின் பெயர் ஓவியங்களில் பதிந்திருந்தாலும், அவை உண்மையிலேயே ஹிட்லரின் கைவண்ணத்தில் உருவானவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தச் சந்தேகமும் ஓவியங்கள் அதிக விலையில் விற்கப்படுவதும் யாரும் அவற்றை வாங்க முன்வராததற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஓவியங்களை ஏலத்தில் விற்க முயன்ற வெயில்டர் நிறுவனம், சிறிது காலத்துக்குப் பின்னர் மீண்டும் விற்பனை முயற்சியில் இறங்கவிருப்பதாகத் தெரிவித்தது.

நாஜி அடையாளங்களை பொது இடங்களில் காட்சிக்கு வைப்பது ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது என்றபோதும் கல்வி மற்றும் வரலாற்று நோக்கங்களுக்காக இதற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...