சிரியாவிலுள்ள கடைசி ஐ.எஸ் கோட்டையில் உக்கிர மோதல் | தினகரன்

சிரியாவிலுள்ள கடைசி ஐ.எஸ் கோட்டையில் உக்கிர மோதல்

ஈராக் எல்லைக்கு அருகாமையில் உள்ள இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நிலப்பகுதியில் சிரியாவின் அமெரிக்க ஆதரவு போராளிகள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.

ஐ.எஸ் நிலைகள் மீது அமெரிக்க வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களுக்கு மத்தியிலும் அங்கு சண்டை பல மணி நேரமாக நீடித்து வருகிறது.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பலம்மிக்க பகுதியை 600 வரையான ஜிஹாத் போராளிகள் காத்து வருவதாக நம்பப்படுகிறது. டயர் அல் சோரின் கிழக்காக அமைந்திருக்கு இந்த பகுதியில் சிறு சிறு குழுக்களாக நின்று ஐ.எஸ் உறுப்பினர்கள் தமது நிலையை பாதுகாத்து வருகின்றனர்.

தொடர் மோதலில் ஐ.எஸ் குழுவிடமிருந்து பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் யூப்ரடீஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமார் 4 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ளது உள்ளது.

கடந்த டிசம்பரில் ஜிஹாத் போராளிகளின் மனைவிகள், குழந்தைகள் எனக் கூறப்படும் சுமார் 37 ஆயிரம் பேர் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்று விட்ட நிலையில் சுமார் 600 உறுப்பினர் இந்த 4 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ் குழு சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான நிலத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கடந்த ஒரு வாரமாக நீடித்த யுத்த நிறுத்தம் காரணமாக இந்த பகுதியில் இருந்து 20,000 பொதுமக்கள் வரை வெளியேறியதாக அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்க ஆதரவுப் படை விவசாய நிலங்கள் ஊடாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டிருக்கும் சிரிய கண்காணிப்பாளர்கள் அங்கு உக்கிரமோதல் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

வான் தாக்குதலின் உதவியோடு சிரிய ஜனநாயகப் படை அண்மைய மாதங்களில் ஐ.எஸ் குழுவை வட கிழக்கு சிரியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பின்வாங்கச் செய்தது.

ஐ.எஸ் குழு உச்சத்தில் இருந்த 2014 காலகட்டத்தில் அதன்் கட்டுப்பட்டுப் பிராந்தியத்தில் சுமார் 77 இலட்சம் மக்கள் வசித்து வந்தனர். அப்பிராந்தியத்தின் பரப்பளவு பிரிட்டனின் பரப்பளவுக்கு நிகரானதாக இருந்தது.

ஐ.எஸ் அமைப்பினர் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்டதாகவும், சிரியாவிலுள்ள 2,000 அமெரிக்கப் படையினரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

“ஐ.எஸ் வசமிருந்த பிராந்தியங்கள் 100 வீதம் மீட்கப்பட்டபின், அடுத்த வாரம் படைகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வரும்” என்று புதன்கிழமை அவர் தெரிவித்தார்.

கடுமையான தோல்விகளைச் சந்தித்த பின்னரும், ஈராக் மற்றும் சிரியாவில் இன்னும் 14,000 முதல் 18,000 பேர் வரை ஐ.எஸ் அமைப்பினர் இருக்கலாம் என்று ஐ.நா கணித்துள்ளது. அவர்களில் 3,000 பேர் வரை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

ஐ.எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா, மேற்கு ஆபிரிக்க நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளனர்.

சோமாலியா, யேமன், சினாய் தீபகற்பம் மற்றும் ஆபிரிக்காவிலுள்ள சாஹெல் பகுதி ஆகிய இடங்களிலும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், அதன் கொள்கைகளால் உந்தப்பட்டவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


Add new comment

Or log in with...