இந்திய அணி போராடி தோற்றது தொடர் நியூசிலாந்து அணி வசம் | தினகரன்

இந்திய அணி போராடி தோற்றது தொடர் நியூசிலாந்து அணி வசம்

மூன்றாவதும் இறுதியுமான ரி -20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ரி -20 தொடரை நியூசிலாந்து அணி 2-–1 என கைப்பற்றியுள்ளது.

கடந்த (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி ரி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் கடும் இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அவ் அணி சார்பில் தமிழக வீரர் விஜய் சங்கர் அதிரடியாக விளையாடி 43 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 38 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சாண்ட்னர் மற்றும் டாரல் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-–1 என கைப்பற்றியுள்ளது.


Add new comment

Or log in with...