மாலிங்க– திசர பிரச்சினைக்கு தீர்வூகாண மெதிவ்ஸின் உதவியை நாடிய அமைச்சர் | தினகரன்

மாலிங்க– திசர பிரச்சினைக்கு தீர்வூகாண மெதிவ்ஸின் உதவியை நாடிய அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நிலவிவருகின்ற முறுகல் நிலையைவிரைவில் முடிவுக்குகொண்டுவரும் நோக்கில் இலங்கை அணியின் முக்கிய நான்கு சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த சனிக்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடினார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற இவ்விசேட சந்திப்பில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், இலங்கை ஒருநாள் மற்றும் ரி -20 அணிகளின் தலைவர் லசித் மாலிங்க,அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் திசரபெரேரா ஆகிய வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை அணியில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை முடிவுக்குகொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சிலமாதங்கள் இருப்பதால்,அணிக்குள் பிளவு ஏற்படாமல் ஓரணி என்ற உணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர்,உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விடயம் தொடர்பிலும் ஆலோசனை கேட்டுள்ளார்.

மேலும்,மாலிங்கவுக்கும்,திசரவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இருவரிடமும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் படியும் விளையாட்டுத்துறை அமைச்சர் அஞ்சலோமெதிவ்ஸிடம் இதன்போதுகேட்டுக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மீண்டும் ஒருமுறை அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது லசித் மாலிங்க மற்றும் திசர பெரேராவின் மனைவிமார்கள் சமூகவலைத் தளங்களில் அவதூறு தெரிவித்து முன்வைத்த கருத்துக்களை அடுத்து இலங்கை அணிக்குள் மிகப் பெரிய குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் ஒருநாள் மற்றும் ரி -20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோரை கடந்த 30ஆம் திகதி வெவ்வேறாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

நின்றுவிடாமல் தனது சொந்த செலவில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்வையிட கன்பரா சென்றஅவர்,அங்குள்ள இலங்கை வீரர்களை சந்தித்து அணிக்குள் தற்போதுஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்து வீரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறைஅ மைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் வீரர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...