பொதுக் குழாய்க் கிணற்றில் படையினர் தொடர்ச்சியாக நீர் எடுப்பதால் பாதிப்பு | தினகரன்


பொதுக் குழாய்க் கிணற்றில் படையினர் தொடர்ச்சியாக நீர் எடுப்பதால் பாதிப்பு

முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பொதுக் குழாய் கிணறொன்றில் படையினர் தொடர்ச்சியாக பௌசர்களில் நீர் எடுத்து வருவதால் நிலத்தடி நீர் வளம் குறைவடைவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  

கணுக்கேணி பகுதியில் மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்ட குழாய்க் கிணறு ஒன்றில் அதிகளவான நீரினை தண்ணீர் பௌசர்கள் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கு கடந்த 10வருடங்களாக படையினர் எடுத்து வருவதனால் நிலத்தடி நீர் வளம் குறைவடைந்து கிணற்று நீர் காவி நிறமாக மாறிவருவதோடு குடிநீருக்கு பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

இக் கிணற்றுக்கு பாதுகாப்பாக அருகில் காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் பல்வேறு சுகாதார சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. மலசலகூடத்தில் மல கழிவுகள் மேலால் வழிந்து செல்கின்றது .  

கழிவுநீரை சேமிக்கும் கிடங்கு மூடப்படவில்லை. டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு கழிவுநீரும் அகற்றப்படுவதில்லை. படையினர் நீர் எடுப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்துவதால், அதன் சத்தம் அருகிலுள்ள வீடுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அத்தோடு வீடுகளின் நுழைவாயில்களை மறித்து படையினர் வாகனங்களை நிறுத்தி நீர் எடுப்பதால் தமது அன்றாட போக்குவரத்து பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமைகள் குறித்து கணுக்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர் த. அமலனிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளார்கள். 

இது தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரியுடன் பிரதேச சபை உறுப்பினர் மக்களின் பிரச்சினை தொடர்பில் தெரிவித்துள்ளார். இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாங்குளம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...