ஆழ்மனதிலிருந்து இறைவனுக்கு நன்றி கூறும் திருப்பாடல்! | தினகரன்

ஆழ்மனதிலிருந்து இறைவனுக்கு நன்றி கூறும் திருப்பாடல்!

பரிசுத்த வேதாகமத்தில் 138வது திருப்பாடல் இறைவனுக்கு நன்றி கூறும் பாடலாக அமைந்துள்ளது.  

உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் நன்றித்திருப்பாடல் இது.  

நாம் விடுதலை அடைந்து விட்டோம், மீட்பு அடைந்துவிட்டோம் என்றால் அதற்கெல்லாம் காரணம் நீ என இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தும் பாடல் இது.  

இத்திருப்பாடலை எழுத்தியவர் தனிப்பட்ட ரீதியில் இறைவன் தமக்கு என்ன செய்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. எனினும் தமது வாழ்வு, விடுதலை தமது அனைத்திற்கும் காரணம் ஆண்டவர் மட்டுமே என குறிப்பிடுகின்றார்.  

பாடலாசிரியர் நான்கு விதமாக தமது நன்றிப் பாடலைப் பாடுகின்றார்.முழு உள்ளத்தோடும் நன்றி செலுத்துவேன்” தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன் என்றார். 

தெய்வங்கள் என அவர் குறிப்பிடுவது அக்காலங்களில் வணங்கப்படடு வந்த பிற இன தெய்வங்களாகவும் இருக்க முடியும். அல்லது விண்ணிலே இறைவன் அருகில் அமர்ந்திருக்கும் வானதூதர்களை அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.  

அல்லது நம் முன்னோரை வழிநடத்திய மோயீசன், ஆபிரகாம், எலியா போன்றவர்களை குறிப்பிட்டி ருக்கலாம்.  

 எவ்வாறெனினும் எல்லோர் முன்னிலையிலும் ‘நீரே என் கடவுள்’ எனப் புகழ்ந்து பாடுவேன் என அவர் குறிப்பிடுகிறார்.  

“உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைப் பணிவேன்” என நன்றிப்பாடல் பாடுகிறார். விண்ணகத்திலுள்ள திருக்கோவிலோ அல்லது மண்ணகத்திலுள்ள திருக்கோவிலோ எது என்றாலும் நான் புகழ்வேன். முழுமையாக உம்மிடம் சரணடைந்துவிட்டேன் என்கிறார் அவர்.  

நாம் சில வேளைகளில் பொருளையோ அல்லது காணிக்கையையோ கடவுளுக்கு வழங்கி விட்டு அதனைக் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியாகக் கருதுகிறோம்.  

அவை வெளிப்படையானவை. வெறும் வெளி அலங்காரம் என அதனை குறிப்பிடலாம்.  

ஆனால் இறைவனுக்கான நன்றி என்பது உள்ளத்திலிருந்து வருவது.  

“நீ எனக்குப் போதும். என்று வாழ்வின் அனைத்துமே உமக்குத்தான் இறைவா” என்பதே உண்மையான நன்றி செலுத்துவதாகும்.   “உமது வார்த்தை, வாக்கு, உடன்படிக்கை நிலையானவை” உமது பெயரையும் வாக்கையும் மேன்மையுறச்செய்துள்ளீர். இறைவா நீர் என்றும் மாறாதவர். வாக்கு மாறாதவர். அதனை எண்ணி நான் புகழ்கிறேன்.    நீர் உலக மன்னர்கள் வழியாக ஏழை எளிய மக்களையும் துயரத்திலிருப்போரையும் பாதுகாத்து பராமரித்து வழிநடத்துகின்றீர். அதற்காக உம்மைத் துதிக்கின்றேன்.    தேவையிலிருப்போரை தேடி உதவுபவர்களாக நாட்டு மன்னர்கள் இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக இவ்வுலகில் ஆட்சி செய்பவர்கள் என்பதையும் இத்திருப்பாடலில் ஆசிரியர் விளக்குகிறார்.  

ஆயர்கள், குருக்கள், துறவிகள், மன்னர்கள் அனைவருமே கடவுளின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள். மக்களுக்கு அவர்கள் கடவுள் போன்றவர்கள் என்கிறார் திருப் பாடலாசிரியர்.   “நீர் ஒருபோதும் என்னைக் கைவிட மாட்டீர்” என்ற வரிகள் நம்பிக்கையின் உச்சமாக உள்ளது. “ பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்” என வாக்களித்த இறைவனை புகழும் பாடல் இது. “உமது வலக்கையில் எம்மைக்காப்பாற்றுகின்றீர்” நீர் வாக்களித்த அனதைதையும் செய்து முடிப்பீர். அந்த நம்பிக்கை எனக்குண்டு!  

இதுவே இறைவனுக்கு செலுத்தும் உன்னத நன்றி. இத்திருப்பாடலை தினமும் வாசித்துப் பயன் பெறுவோம்.  

அருட்திரு

ஜெரால்ட் ரவி 

 


Add new comment

Or log in with...