மட்டு. மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; மீன்பிடி முற்றாக பாதிப்பு | தினகரன்

மட்டு. மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; மீன்பிடி முற்றாக பாதிப்பு

மீனவர்கள் அவதி; இந்நிலை சில தினங்கள் தொடரும் - வ.ம.தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு நிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளன.

நாளையும் இந்நிலைமை தொடரும் என மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார்.

ஒரு சில நாட்களுக்கு, குறிப்பாக நேற்று (11) முதல் நாளை (13) நாட்டையும் நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்பில் காற்றுடனான நிலை அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் நாளையும் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடுமையாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளனர். மீனவர்களை கடற்றொழில் நடவடிக்கைககளில் அவதானமாக இருக்குமாறு மாவட்ட வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைககளிலிருந்து முற்றாக விலகியுள்ளதால் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பிரதேசங்களில் கடும் காற்றும் வீசுகின்றது.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையினால் மாவட்ட்த்தில் கடல் மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் சுமார் 26,000 குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இன்றும் நாளையும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.


Add new comment

Or log in with...