மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாதத்துடன் தீர்வு | தினகரன்

மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாதத்துடன் தீர்வு

வைத்தியசாலைகள் எதிர்நோக்கியுள்ள மருந்து தட்டுப்பாடு அடுத்த மாதம் இறுதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுமென சுகாதார அமைச்சர் டொக்டர். ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை சுமார் ஆயிரம் தரக்குறியீடு களுடன் வெளிவரும் 100வகை மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"இதுவரை 73வகை மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 27மருந்துகளின் விலைகளை வெகு விரைவில்குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த 52நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியாலே நாட்டில் முன்னொருபோதும் இல்லாதவாறு மருந்துக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"மருந்து தட்டுப்பாட்டுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் சரியான காலத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவும் என்பதை எதிர்வுகூறவில்லை. இதன் காரணமாக புற்றுநோயாளிகளுக்கு அவசியமான மருந்துகளை மூன்று தடவைகள் அவசர அவசரமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.      


Add new comment

Or log in with...