நாட்டை பொருளாதாரத்தின் திருப்பு முனையாக மாற்ற சகலரும் ஒன்றுபடுங்கள் | தினகரன்


நாட்டை பொருளாதாரத்தின் திருப்பு முனையாக மாற்ற சகலரும் ஒன்றுபடுங்கள்

அரசாங்க ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் பொருளாதாரத் துறையில் திருப்பு முனையாக இவ்வருடத்தை மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் வருடமான இவ்வருடத்தில் அரசியல்வாதிகள் தேர்தல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அதிகரிக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இவ்வருடத்தை பொருளாதார துறையில் திருப்புமுனையாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு செயற்படாவிட்டால் நாடு பொருளாதார ரீதியாக மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட   ஜனாதிபதி, தேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக் கூடாது என்றும் வலியுறுத்தினார். நாடு முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டு, சிறந்ததோர் சமூகத்தையும் சட்டத்தை மதிக்கின்ற நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒருபோதும் பின்னடையக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட திட்டங்கள் தொடர்பான இலக்குகள் சம்பந்தமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வறுமையை ஒழிக்கும் முக்கிய இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கம் வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது. உற்பத்தி செயன்முறைகளின் மூலம் வறுமையை ஒழித்து சுயமாக எழுந்திருக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட அம்சமாகும்.இவ்வருடம் இதனை மேலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை அடிப்படையாக்க் கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கிராமசக்தி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப் பட்டவுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம், சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம், பேண்தகு பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டம், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், தேசிய போசணை நிகழ்ச்சித்திட்டம், அங்கவீன முற்றோர் மற்றும் முதியோர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம், கலாசார புத்தெழுச்சி நிகழ்ச்சித் திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டங்கள் பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்திறனை இவ்வருடம் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு 2025ஆம் ஆண்டளவில் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

2019ஆம் ஆண்டின் புதிய இலக்குகளுடன் கூடிய நிகழ்ச்சித்திட்டங்கள் நேற்றைய சந்திப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

3% மற்றும் 4% என்ற குறைந்த மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அரசியல் காரணங்களினால் இவ்வருடத்தில் மேலும் வீழ்ச்சியடையுமானால் நாட்டின் முன்னேற்றம் கடினமானதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்து 21 மில்லியன் மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் பொறுப் புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். வன அடர்த்தியை அதிகரித்து சுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான சென்சோ இயந்தி்ரம் முதல் பாரிய இயந்திரங்கள் வரை அனைத்து இயந்திரங்களுக்கும் கட்டாயமாக அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த வகையில் இந்த இயந்திரங்களை தம்வசம் வைத்திருக்கின்றவர்கள் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் மார்ச் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும். அனைத்து பொலிஸ் நிலையங்களும் தமது அதிகார எல்லைக்குள் இத்தகைய இயந்திரங்களை வைத்திருக்கின்றவர்கள் பற்றிய பெயர்ப் பட்டியல் ஒன்றை பேணிவர வேண்டும் என்பதுடன், அவ் இயந்திரங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். (ஸ)


Add new comment

Or log in with...