டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு | தினகரன்


டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு

டெல்லியில் இன்று (12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய டெல்லியில் கரோல் பாக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கரோல் பாக்கில் செயல்பட்டு வரும் ஆர்பித் பலஸ் என்ற ஹோட்டலில் இன்று  காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடினர்.

சுமார் 20 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் துரதிருஷ்டவசமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து இன்று காலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை விடவும், மூச்சுத் திணறலால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தீயணைப்பு துறை கூறியுள்ளது.

இதேவேளை இந்த ஹோட்டலில் 65 அறைகளில் 150 இற்கு மேற்பட்டோர் தங்கியிருந்துள்ளனர். நான்காவது மாடியில் தீப்பிடிக்க ஆரம்பித்த தீயே இவ்வாறு பரவியுள்ளது என்று ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஹோட்டல் அறைகளிலிருந்து ஒரு சிலர் பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுவதோடு, சுமார் 35 அறைகள் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய டெல்லியில் அமைந்திருக்கும் கரோல் பாக் சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற இடமாகும். இப்பிரதேசம் ஹோட்டல்களும், சந்தைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ள இடமாகும்.

இதேவேளை தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Source: NDTV

Add new comment

Or log in with...