எதிரணியின் தேர்தல் துரும்பாகி போனது உத்தேச அரசியலமைப்பு! | தினகரன்

எதிரணியின் தேர்தல் துரும்பாகி போனது உத்தேச அரசியலமைப்பு!

இலங்கை கடந்த 1948ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது தொடக்கம் தென்னிலங்கையின் அரசியலானது இனவாதத்தின் மீதே பயணம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு-, கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை உருவெடுத்த காலம் தொடக்கம் தென்னிலங்கையில் இனவாத அரசியலும் தோற்றம் பெற்று விட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை அரசியலில் நிலைத்து நிற்பதற்கு இனவாதத்தைப் போன்ற வேறெந்தத் துரும்பும் கிடையாது. இதற்கான காரணங்கள் இரண்டாகும்.

இலங்கை அரசியல்வாதிகள் பலரிடம் நேர்மைத்தன்மை இல்லாதிருப்பது முதலாவது காரணம். அதாவது தங்களது அரசியல் ஆதாயத்துக்காக எவ்வாறான பாத்திரத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை. இவ்வாறான அரசியல்வாதிகள் 'இனவாதம்' என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கும் போது பெரும்பான்மை மக்களில் பலர் இலகுவாகவே ஈர்க்கப்படுகின்றனர்.

தாங்கள் செல்கின்ற அரசியல் பாதை நேர்மையற்றது என்ற சங்கோஜ உணர்வு இந்த அரசியல்வாதிகளுக்கு சற்றேனும் ஏற்படுவதில்லை. தங்களது அரசியல் நிலைப்புத்தான் இவர்களுக்கு முக்கியம்!

இனவாத அரசியலின் வெற்றிக்கான இரண்டாவது காரணம், பெரும்பான்மை மக்கள் பலரிடம் காணப்படுகின்ற அறியாமை ஆகும்.

அரசியல்வாதிகள் கூறுகின்ற இனவாதக் கருத்துக்களை அலசி ஆராய்ந்து பார்ப்பதற்கு பெரும்பான்மை மக்களில் பலர் ஒருபோதுமே முன்வருவதில்லை. அரசியல்வாதிகள் கூறுகின்ற எத்தகைய கட்டுக்கதைகளையும் முழுமையாக நம்பி விடக் கூடியவர்களாக இன்னுமே பலர் உள்ளனர் என்பதுதான் வேடிக்கை! இவர்கள் மத்தியில் உள்ள கல்வி கற்ற சமூகத்தினர் கூட அறிவிலிகள் போன்று அனைத்தையும் நம்புவதற்குத் தயாராக உள்ளனர்.

இவ்வாறான இரண்டு முக்கிய காரணங்களாலேயே ‘இனவாத அரசியல் வியாபாரம்’ அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எமது நாட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றது. எனலாம்.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக அரசுக்கு எதிரான கட்சிகளில் இருந்து இப்போது வெளிவருகின்ற கருத்துகளும் இலங்கையின் அரசியலுக்குப் புதுமையானவை அல்ல. அரசின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வீழ்த்தி, எதிரணியை நோக்கி மக்கள் அலையைப் பெருக்கிக் கொள்வதற்காக காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உத்தி அது!

அரசியலமைப்பைத் திருத்துவதற்கு முன்பாக தயாரிக்கப்படும் சட்டமூலம் கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதேசமயம் உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களிடம் பிரதமர் இதுவரை எந்த யோசனையும் முன்வைக்கவில்லை.

இருந்த போதிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக எதிர்த் தரப்பில் இருந்து புதுப்புது எதிர்வுகூறல்களெல்லாம் வந்தபடியே உள்ளன.

நாட்டைத் துண்டாடுவதற்கு ஐ. தே. க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர். வடக்கு, கிழக்குக்கு சுயாட்சி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து விட்டதாகவும் மற்றொரு சாரார் கூறி வருகின்றனர்.

சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான ஆதாரமற்ற கருத்துகள் வீணான குழப்பத்தை ஏற்படுத்துமென்பதை இங்கு கூறத் தேவையில்லை.

இதுபோன்ற வீண் கற்பனைகளும், விஷமப் பிரசாரங்களும் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏறபடுத்துவது மாத்திரமன்றி, அரசியல் யாப்பு மீதான எதிர்ப்பையும் கிளப்பி விடுமென்பது உண்மை. இவ்வாறான எதிர்ப்பு அலையை அம்மக்களிடம் உருவாக்கி விட்டு அவர்களை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தூண்டி விடுவதற்கும் இவ்வாறான அரசியல்வாதிகள் ஒருபோதுமே பின்னிற்கப் போவதில்லை.

உத்தேச அரசியல் யாப்புக்கு எதிராக தென்னிலங்கையில் அப்பாவி மக்களைத் தூண்டி விடுகின்ற அரசியல்வாதிகள் தொடர்பாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையில் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இருந்து இதுவரை காலமும் அரசுடன் நல்லிணக்கப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் போதிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

ஆனாலும் அரசுக்கு எதிரான தரப்பினர் சமீப காலமாக அரசியல் யாப்பு தொடர்பாக எதிரான கருத்துகளையே சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருவதைக் காண முடிகின்றது. தேர்தல்கள் எதிர்நோக்கப்படுவதனால், உத்தேச அரசியலமைப்பை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தலாமென அவர்கள் கருதக் கூடும்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற அரசொன்று நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சியில் இறங்குகின்ற போது, எதிரணியில் இருப்போர் அதற்கு முட்டுக்கட்டை போடுவதென்பது எமது நாட்டின் முன்றாம் தர அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடாகும். இத்தகைய சீர்கேடான கலாசாரத்தின் விளைவாகவே தேசியப் பிரச்சினைக்கான தீர்வும் சாத்தியமற்றுப் போகின்றது.

இவ்வாறான அரசியல் கலாசாரம் எமது நாட்டிலிருந்து நீங்குவது எப்போது? நாட்டை நேசிக்கின்ற மக்களின் ஆதங்கம் இதுதான்!


Add new comment

Or log in with...