வரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை | தினகரன்

வரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை

ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் 

வருமான வரியில் மாற்றங்கள் செய்தல் மற்றும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (ஆர்.ஏ.எம்.ஐ.எஸ்) என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் வரிகளுக்கான குறைகேள் அதிகாரிக்கான தேவை காணப்படுகிறது. வரிகளைச் செலுத்தச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு இந்த நியமனம் உதவியாக இருக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி க.கனகஈஸ்வரன் தெரிவித்தார். 

2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வரி குறைகேள் அதிகாரி (வரி ஒம்புட்ஸ்மன்) ஒருவரை நியமிப்பது குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டது. இதற்கமைய 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஒருவரே அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவதும் கடைசியுமான நபராவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.  பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 22வது வருடாந்த வரி பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் இதனைத் தெரிவித்தார். 

“வரி குறைகேள் அதிகாரிக்கான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டல்கள் என்பன இரண்டு வருடங்களுக்காகத் தயாரிக்கப்பட்டன. முதலாவது நபரின் பதவிக்காலம் முடிந்ததும் அப்பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தப் பதவி இன்னமும் செயற்பாட்டில் உள்ளது” என்றார். 

பாகிஸ்தானில் வரி குறைகேள் அதிகாரி சட்டம் 2000ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது, அதனை எவ்வாறு அந்நாட்டவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் அவர் விரிவாக விளக்கினார். அந்நாட்டு சட்டத்துக்கு அமைய வரி குறைகேள் அதிகாரி ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன், வரி தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 60 நாட்களுக்குள் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வரி திணைக்களத்துக்கு பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும். 

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வரி தொடர்பான மறுசீரமைப்புக்கள் மற்றும் கொள்கைகள் தயாரிக்கப்படும்போது பொதுவான பொறிமுறையொன்று இல்லையென்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. புதிய இறைவரித் திணைக்களச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வரிவிதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.

வரி மேன் முறையீட்டு ஆணைக்குழு, நீதிமன்றக்கட்டமைப்பு என்பவற்றின் ஊடாக வரி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தாலும் இது சிக்கலான அல்லது காலத்தை இழுத்தடிக்கும் நடைமுறையாகவிருக்கும்.

எனவேதான் சுயாதீனமாக செயற்படக்கூடிய குறைகேள் அதிகாரி அல்லது ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் இரண்டு வகையான குறைகேள் அதிகாரிகள் உள்ளனர்.

அரச குறைகேள் அதிகாரி மாற்றையது தனியார் குறைகேள் அதிகாரி. அரச குறைகேள் அதிகாரியென்பவர் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர். இவர் பொது அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குபவராக இருப்பார். அதேநேரம் இலங்கையில் இரண்டு தனியார் குறைகேள் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

ஒன்று நிதி குறைகேள் அதிகாரி மற்றையவர் காப்புறுதி குறைகேள் அதிகாரி. இவ்வாறான நிலையில் வரி தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வரி குறைகேள் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்றார்.    


Add new comment

Or log in with...