மோசடியைத் தடுக்க குறுஞ்செய்தி சேவை | தினகரன்

மோசடியைத் தடுக்க குறுஞ்செய்தி சேவை

ஏ.ரி.எம் அட்டைகளை திருட்டுத்தனமாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் சகல வாடிக்கையாளர்களும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வங்கியால் வழங்கப்படும் குறுஞ்செய்தி வசதியைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானது என துறைசார் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வங்கியொன்றில் வாடிக்கையாளரால் பேணப்படும் கணக்கில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் கையடக்கத்தொலைபேசிகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்துவதில்லையென நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஏ.ரி.எம். தன்னியக்க இயந்திரங்களில் இரகசியமான கருவிகளைப் பயன்படுத்தி ஏ.ரி.எம் அட்டைகளின் தகவல்களைப் பெற்று வங்கிக் கணக்கு உரிமையாளர்களின் அனுமதியின்றி பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை வங்கியாளர் சங்கமும், அட்டைக் கொடுப்பனவு தனியார் நிறுவனமும் இணைந்து அறிவித்திருந்தன.

வங்கியில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும்போது குறித்த வங்கியினால் ஏ.ரி.எம் அட்டை வழங்கப்படும். குறித்த ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை உடனுக்குடன் குறுஞ்செய்தியாக அறிவிக்கும் சேவையொன்றை சகல வங்கிகளும் கொண்டுள்ளன. இந்த சேவையைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக மோசடியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும் என வங்கித்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  


Add new comment

Or log in with...