அராப் ஹெல்த் 2019 கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு | தினகரன்

அராப் ஹெல்த் 2019 கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு

ஆரோக்கிய சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் டுபாயில் நடைபெற்ற ‘அராப் ஹெல்த் 2019’ கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த ஆறு ஆரோக்கிய சுற்றுலாத்துறை நிறுவனங்கள் பங்கெடுத்தன. இலங்கையில் உள்ள ஆரோக்கிய சுற்றுலாத்தளங்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்நிறுவனங்கள் காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன. வருடாந்தம் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் இலங்கை முதல் தடவையாக பங்கெடுத்திருந்தது. மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க பிராந்தியத்தில் நடைபெறும் மாபெரும் கண்காட்சியாக இந்தக் கண்காட்சி அமைந்தது.

பொருளாதார இராஜதந்திர திட்டத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுதவியில், சுற்றுலா ஊக்குவிப்பு அபிவிருத்தி சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கெடுத்தன. இலங்கையின் ஆரோக்கிய சுற்றுலாத்துறையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வது மற்றும் இது சம்பந்தமான சுற்றுலாத்தளங்களைப் பிரபல்யப்படுத்துவது பிரதான நோக்கமாகவிருந்தது. 

இலங்கை நிறுவனங்கள் பங்கெடுத்த காட்சித் தொகுதியை சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் அபுதாபிக்கான இலங்கைத் தூதுவர் சரித்த யட்டகொட உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இக்கண்காட்சியில் பங்கெடுத்த சுற்றுலாத்துறை செயற்பாட்டு நிறுவனங்களுடன் நேருக்கு நேரான சந்திப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட 1000ற்கும் அதிகமான கம்பனிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இலங்கை கம்பனிகளுக்குக் கிடைத்திருந்தன. 

இலங்கை காட்சிக் கூடங்கள் தொடர்பில் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கென்சியூலர் ஜெனரல் முழுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

ஹெட்டிகொட இன்டஸ்ரீஸ் பிரைவட் லிமிடட், ஹெரிடன்ஸ் ஆயுத்வேத மஹா கெதர, பிரேபரின் ஆயர்வேத ரிசோட், கயா ஹெல்த் ரிசோட், சென் வெல்நஸ் சஞ்சுவரி ஆகிய கம்பனிகள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டன. 

அராப் ஹெல்த் 2019 கண்காட்சியில் 160 நாடுகளிலிருந்து 4,150 கம்பனிகள் பங்கேற்றிருந்ததுடன், 84,500ற்கும் அதிகமான சுகாதாரத்துறை மற்றும் வர்த்தக துறைசார் நிபுணர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.   


Add new comment

Or log in with...