தனித்தனி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க துபாய் பொலிஸ் முடிவு | தினகரன்

தனித்தனி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க துபாய் பொலிஸ் முடிவு

-அங்கொட லொக்காவும் துபாயில் நேற்று கைது

-மதுஷின் நெருங்கிய சகா ஆயுதங்களுடன் கைது

துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச போதை வர்த்தகரான மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 16 பேரை கைதுசெய்தபோது தப்பிச்சென்ற மதுஷின் நெருங்கிய போதைப்பொருள் வர்த்தகரான அங்கொட லொக்கா என்பவர் நேற்று துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

துபாயில் வேறொரு ஹோட்டலில் தலைமறைவாகியிருந்தபோதே அங்கொட லொக்காவை பொலிஸார் கைது செய்ததாக  பொலிஸ் விசேட செயலணி தெரிவித்துள்ளது. 

கைதுசெய்தபோது அவர் ஹசீஸ் போதைப்பொருளை உட்கொண்டிருந்தார் என அவரது இரத்தப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.இதேவேளை, துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 16 பேரும் நேற்றைய தினம் துபாய் நேரப்படி பிற்பகல் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதுடன், 16 சந்தேக நபர்கள் தொடர்பிலும் அந்நாட்டு பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை நடத்தி தனித்தனியான அறிக்கைகளை அங்குள்ள நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதனால் அதற்கான தீர்ப்பை வழங்குவதில் நீதிபதிகளுக்கு போதியளவு காலம் தேவைப்படுமென்றும் பொலிஸ் விசேட செயலணியின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.  

இந்த போதைப்பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வது தொடர்பில் எமது நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமன்றம் ஆகியன  மேற்கொண்ட செயற்பாடுகள், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தற்போது துபாய் பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் அந்நாட்டு பொலிஸாரினால் துபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

இதனோடு இப்போதைப் பொருள் வர்த்தகர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பான வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.  

கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி போதைப்பொருள் வர்த்தகர்களின் கையாட்களைக் கைதுசெய்வதற்காக நாட்டின் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட செயலணியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிணங்க போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப் படும் 20 பேர் கடந்த மூன்று தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிணங்க நேற்றைய தினம் முக்கிய போதைப் பொருள் வர்த்தகரான அந்தராவத்தை சாமர என்பவர் மட்டக்குளியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக வென்னப்புவ பிரதேசத்தில் சாமுக்க மதுசான் மலுமரா உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று தினங்களுக்குள் தென் மாகாணத்திலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களுள் மாக்கந்துர மதூஷின் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு பாரியளவில் உறுதுணையாக இருந்தவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் விசேட செயலணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ஸ)  

(நமது நிருபர்)


Add new comment

Or log in with...