மாற்றுத்திறனாளிகள்; காரணிகள் கண்டறியப்பட்டு வருமுன் காப்போம் | தினகரன்


மாற்றுத்திறனாளிகள்; காரணிகள் கண்டறியப்பட்டு வருமுன் காப்போம்

ஒரு குழந்தை பிறந்து தாயின் அரவணைப்பில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்துவரும்போது அக்குழந்தை வலது குறைந்த மாற்றுத் திறனாளி என அறிந்தால் அந்த தாய், தந்தை படும் வேதனை,துன்பத்தை வார்த்தைகளில் கூறமுடியாதது.பின்னர் அக் குழந்தையை சாதாரண நிலைக்கு கொண்டுவருவதென்பது கடும் சிரமமான செயற்பாடாகும்.

வலது குறைந்த பிள்ளைக்கு சமகால அறிவியலாளர்கள் வளங்கியுள்ள பெயர் மாற்றுத் திறனாளி என்பதாகும். இந்தப் பெயர் உண்மையில் பெற்றோரையும் பிள்ளையையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்ற ஓர் பதப் பிரயோகம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இப் பெயர், உனக்குள்ளும் ஒரு திறமை உண்டு கவலைப்படாதே என்று ஆறுதல் கூறும் வார்த்தையாக காண்கிறோம். எனினும் இவ்வாறானவர்களை இளமையிலும் முதுமையிலும் பராமரிப்பது என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். ஒரு மாற்றுத்தினாளியைப் மனம் நோகாது கவனிப்பவர்களுக்குத் தான் அதன் வலியும் வேதனையும் புரியும். அதைவிட வேதனை மிகுந்ததாக அந்த மாற்றுத் திறனாளிகளின் மன நிலை இருக்கும். எனவே சில மாற்றுத் திறனாளிகள் உளவியல் தாக்கத்திற்குட்பட்டு தம்மை அண்டி இருப்போருடனும் அன்பு காட்டுபவர்களுடனும் மிகவும் வன்மையாக நடந்துகொள்ளவே பார்க்கிறனர்.ஆதலால் இது சில நேரங்களில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவிடுகிறது.

எனவே வலது குறைந்தவர்களின் உருவாக்கம் தொடர்பான அடிப்படைக் காரணிகளை ஆராய்வது இவற்றைக் குறைப்பதற்கு மிகவும் பேருதவியாக இருக்கும். நமது நாட்டில் வருடத்திற்கு சுமார் 6000 குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமுற்று அல்லது வலது குறைந்தவர்களாகப் பிறப்பதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சில தாய்மார்களின் கர்ப்பகாலப் பரிசோதனைகளின்போது இவ்வாறான குழந்தைகள் இனங்காணப்படுவதுண்டு. எனினும் இலங்கையில் அமுலில் உள்ள சட்டதிட்டங்களின் படி அந்தக் கருவைக் கலைக்க முடியாது. பிறக்கும்போதே அங்கவீனத்திற்கு அடிப்படையான பரம்பரை நோய்கள், நிறமூர்த்தம் அல்லது பரம்பரை இயல்பு காரணமாக உள்ளன. இவற்றை விசேட பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இவ்வாறான பரிசோதனைகள் மூலம் தீர்வுகள் மேற்கொள்ளும் போது அவ்வாறான குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க உதவியாக இருக்கும். இதற்கு செய்ய வேண்டியது, அவ்வாறான குழந்தைகளின் பெற்றோர்கள் 5 மில்லி லீற்றர் இரத்த மாதிரியை எடுத்து இரசாயனப் பகுப்பாய்வின் மூலம் குறைபாடுகளை கண்டறிய முடியும்.அப் பரிசோதனைகளில் குறைபாடுகள் காணப்படாத விடத்து நிறமூர்த்தங்களில் உள்ள மரபணுக்களில் குறைபாடுகள் உள்ளதா எனக் கண்டறிய வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இவற்றின் மூலம் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிறமூர்த்தத்திலோ அல்லது மரபணுக்களிலோ குறைபாடுகள் இருப்பின் அதனால் உருவாகும் குழந்தைகளுக்கு ஏற்படும் அங்கவீனத்தை தவிர்த்துக் கொள்ள மாற்று வழிகள் கிடையாது. எனினும் மேலும் மேலும் ஒரே பெற்றோருக்கு இவ்வாறான குழந்தைகள் உருவாவதை தவிர்த்துக்கொள்ள இந்த ஆய்வுகள் உதவியாக இருக்கும். இருந்தும் சராசரிப் பெற்றோர்கள் இது பற்றிய அறிவின்மை காரணமாக அல்லது பயத்தின் காரணமாக இந்தப் பரிசோதனைகள் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கின்றனர்.

கருவின் வளர்ச்சிக் காலகட்டததில் தாயின் சூழல் சுத்தமாகவும் ஆரவாரமற்று அமைதியாக இருக்க வேண்டும்.தாயினது மனநிலையில் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மிதமிஞ்சிய கற்பனைகள், கவலைகள் சிசுவின் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்தி அக்குழந்தையின் இயல்பு நிலையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.

அசுத்தமான காற்று, ஓய்வில்லாத இரைச்சல், நச்சு வாயுக்கள் என்பனவும் குழந்தையின் இயல்பிலும் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால்  கர்ப்பமுற்ற தாயின் மன நிலையை சீராக பேணுவது ஆரோக்கியமான குழந்தைகளை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும். மேலும் கர்ப்பக் காலத்தில் இடம்பெறும் எதிர்பாராத விபத்துக்கள், தாக்குதல்கள் கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அக்குழந்தை விகாரமாக அல்லது ஏதேனும் ஒரு வகையில் வலது குறைந்த பிள்ளையாகப் பிறப்பதற்கு காரணமாக அமைந்துவிடலாம்.

குடும்பத் தகராறுகள், உள்வீட்டுப் பிரச்சினைகளால் சிசுவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

பணத்திற்காக கருக்கலைப்பில் ஈடுபடும் போலி வைத்தியர்கள் தாய்க்கும் சேய்க்கும் கேடு விளைவிக்கக்கூடிய மருந்துகளை கொடுப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதோடு கருவைக் கலைத்து விடுவதற்குப் பதிலாக கருவின் வளர்ச்சியில் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் குறை மாத பிரசவத்தில் ஆரோக்கியமற்ற குழந்தையை பெற்றெடுக்கிறார்.அல்லது நிறைமாத பிரசவமாக இருந்தாலும் கூட முறையற்ற மருந்துத் தாக்கத்தின் காரணமாக அக் குழந்தை வலது குறைந்ததாக பிறக்கிறது.எதிர்பாராத விதமாக தாயும் சேயும் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

பின்தங்கிய கிராமப்புறங்களில் பிரசவத் தொழிலில் ஈடுபடுகின்ற மருத்துவிச்சியின் அனுபவத்தால் அதிஷ்டவசமாக சில சுகப்பிரசவங்கள் இடம்பெறாமலும் இல்லை. எனினும் சில சமயங்களில் குழந்தை வெளிவரத் தாமதித்தல் போன்ற அசாதாரண சந்தர்ப்பங்களில் கடுமையான வழிமுறைகளை கையாள்வது ஏற்படக்கூடிய விபரீதம் உடனே தெரிவதில்லை. பிள்ளையின் வளர்ச்சிக் கால கட்டத்திலேயே அவற்றை அறிய முடியும்.

எனவே கருத்தரித்த நாளிலிருந்து விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர்களின் உதவியை நாடவேண்டியதன் அவசியமாகும்.சுகப் பிரசவம் மற்றும் சத்திர சிகிச்சை மூலம் பெறப்படும் குழந்தைகளை தாதிகள் அல்லது உதவியாளர்கள் கையாளும்போது கவனயீனத்தின் காரணமாக அல்லது தவறுதலாக குழந்தையின் உடலில் பாதிப்புக்கள் ஏற்பட்டு அதனால் அவர்கள் விசேட தேவைக்குரிய நிலைக்கு அல்லது அரிதாக மரணத்திற்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு.

2,3 வயது வரை நன்றாக பேசினான்,  நடந்து திரிந்தான், பிள்ளைகளோடு விளையாடினான். ஒரு நாள் காய்ச்சல் வந்தது. வைத்தியரிடம் காட்டினோம். அவர் மருந்து கொடுத்தார். அல்லது ஊசி போட்டார்.

அதன் பின் அவனது நிலைமை மாறிவிட்டது. மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவனது செயற்பாடுகள் முழுமையாக நின்றுவிட்டன. 25 வருடங்களாக அவனுடைய அவசியத் தேவைகளை சுயமாக செய்துகொள்ளக் கூட முடியாதவனாக இருக்கிறான். பிறரின் உதவி இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டான் என்று புலம்புகின்ற பெற்றோரின் உள்ளக் குமுறல்களையும் நாம் கேட்டுள்ளோம். முறையாகப் படிக்காத போலி வைத்தியர்களை நம்பி சிகிச்சை பெறுவதால் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவது இயல்பு. எனவே நாம் சிகிச்சை பெறச் செல்கின்ற வைத்தியர்கள் பற்றிய தெளிவு பெறுவது அவசியமாகும்.மாற்றுத்திறனாளிகள் உருவாதற்கான செயற்கை காரணிகளை இல்லாமல் செய்வதில் நாம் முனைப்பு காட்டினால் இக் குறைபாட்டால் ஏற்படும் துன்பதை ஒரளவு குறைக்கலாம். 

எம். எம். ஹபீபுன் நஜ்ஜாஸ்

விசேட கல்வி ஆசிரியர்,

கே/மாவ/தாருல் உலூம் மு. ம. வி

ரம்புக்கணை


Add new comment

Or log in with...