முதன்முறை கிடைத்த ஏமாற்றமல்ல இது! | தினகரன்


முதன்முறை கிடைத்த ஏமாற்றமல்ல இது!

வழமையான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இம்முறை பல சரத்துக்கள் மாறுபட்டு இருப்பதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் பொதுச் செயலாளர் எஸ். இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த உற்பத்தித் திறன் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு ஆகிய இரண்டும் கம்பனிகளாலும் இதர தொழிற்சங்கங்களாலும்இணைந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். தொழிலாளர்கள் வேலைக்குச் சமுகமளிப்பதை ஊக்குவிக்கவும் அதில் ஈடுபாடு காட்டவும் இவ்விரண்டு கொடுப்பனவுகளும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனை வலியுறுத்தியே தமிழ் முற்போக்குக் கூட்டணி அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியது. இங்கு உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய அமைச்சர் மனோ கணேசன் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகை 140ரூபாவை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உண்மையில் இக்கொடுப்பனவு அவசியமானதேயாகும். அடிப்படைச் சம்பளம் 700ரூபா (முன்பு 500ரூபா), மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவு 40ரூபா (முன்பு 25ரூபா), தேயிலை விலைக் கொடுப்பனவு 50ரூபா.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கான கொடுப்பனவு  105ரூபா. இத்தொகையானது இதுவரை சம்பளத் தொகையோடு உள்ளடக்கப்படாமல் தனியாகவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி இது சம்பளத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும். அடிப்படைச் சம்பளத்துக்கே இவை வழங்கப்படுவது நடைமுறை.

இம்முறையை ஆரம்பத்தில் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், பின்னர் மௌனமாகி கையெழுத்துப் போட்டிருக்கின்றார்.

இங்கு மலையக அரசியல்வாதிகள் தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மலையக மக்களின் வாக்குகளாலேயே தெரிவானவர். இவரின் அமைச்சின் கீழேயே தனியார் கம்பனிகளின் தோட்டங்கள் வருகின்றன. இவர் மனம் வைத்திருந்தால் கம்பனிகள் ஓரளவேனும் நியாயமான சம்பளத்தை வழங்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில் கம்பனி தரப்பைப் பகைத்துக் கொள்ள அவர் தயாரில்லை போலவே தெரிகின்றது.

வழமையாக இராஜகிரியவில் உள்ள பெருந்தோட்ட முதலாளிமார் தலைமைப் பணிமனையில் இடம்பெறும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமரின் அலரிமாளிகையில் இடம்பெற ஏற்பாடு செய்தவர் இவரே என்று தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

இராஜகிரிய பணிமனையின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாலேயே அலரி மாளிகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றதா? அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னால் கைச்சாத்திடல் இடம்பெற வேண்டும் என்ற காரணத்தால் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? இவையெல்லாம் கோள்விக்குறியாகவே இருக்கின்றன.

எனினும் ஐ.தே.க வட்டாரங்கள் வேறு விதமாகக் கூறுகின்றன.பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்படவில்லையென்றும் அந்த நடவடிக்கை வேறு ஒரு அறையில் இடம்பெற்றதன் பின்னர் ஒப்பந்தத்தின் பிரதி பிரதமர் ரணிலிடம் கையளிக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது. தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் பிரதமரைச் சிக்கலுக்குள் அகப்படுத்தி விட்டவர் நவீன் திசாநாயக்காவே என்கிறார்கள் அவதானிகள்.

பாராளுமன்றத்தில் சம்பள விவகாரம் பேசப்பட்ட போது கம்பனி தரப்பால் 600ரூபாவுக்கு மேல் அடிப்படைச் சம்பளம் வழங்க முடியாது என்று பகிரங்கமாகவே வக்காலத்து வாங்கினார்  அவர். அப்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ அதனை பிரதமர் வரை எடுத்துச் சென்று கவனயீர்ப்புப் பெறவோ அமைச்சர் மனோ கணேசன் தவறியது ஏன் என்று புத்திஜீவிகள் கேட்கவே செய்கின்றார்கள்.

இதேவேளை 1000ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிட்டால் தனது பதவியைத் துறப்பேன் என்ற திரும்பத் திரும்பக் கூறி வந்த இ.தொ.கா. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்  இப்பொழுது வேறு விதமாகப் பேசுகிறார்.பேரம் பேசலுக்காவே 1000ரூபா கோரிக்கையை முன்வைத்ததாவும் 700ரூபா நியாயமான சம்பள உயர்வுதான் என்றும் அவர் சமாதானம் சொல்வது பற்றி மக்கள் யோசிக்கவே செய்கின்றார்கள்.

இது பற்றி எம்மோடு கருத்துப் பகிர்ந்து கொள்கிறார் பலாங்கொடை பிரதேச சபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினரும் பாரதி சமூக மேம்பாட்டு மன்றத் தலைவருமான ஏ.எஸ். விஜயகுமார். அவர் சொல்கிறார்...

"கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மக்களின் எதிர்பார்ப்பினை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி விட்டமையை மறுக்க முடியாது .

1000ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் இதர கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டிருக்குமாயின் தேயிலைத் தொழிலைக் கைவிட்டு வேறு இடங்களில் தொழில் செய்து வருபவர்கள் திரும்பவும் தோட்டங்களுக்கே திரும்பி பழையபடி தேயிலைத் தொழிலைத் தொடரும் வாய்ப்பு இருந்திருக்கும்.இதேநேரம் 500ரூபா அடிப்படைச் சம்பளத்திலிருந்து 700ரூபா வரை உயர்த்தப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றமாகவே தெரிகின்றது.

ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதமரிடம் கோரியிருப்பது போல முன்பு வழங்கப்பட்டு வந்த உற்பத்தித் திறன் ஊக்குவிப்புக் கொடுப்புனவு 140ரூபாவும் வருகைக்கான கொடுப்பனவு 60ரூபாவும் வழங்கப்பட்டால் மாத்திரமே இது முழுமை  பெறும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சிக்கு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தர முன்வந்திருப்பது நல்லதொரு முன்மாதிரி.இதேநேரம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் நடந்து கொண்ட முறைமை விமர்சனத்துக்குரியதே.

தோட்டத் தொழிலாளி ஒருவர் 1000ரூபாவை எதிர்பார்ப்பது தமது மூன்று வேளை பசியாற்றவே ஆகும். இதை அம்மக்களின் வாக்குகளால் வந்த அவர் மறந்து போனமை கவலைக்குரியதே. நமது மலையக தமிழ் தலைமைகளே இதனை மறந்துதானே செயல்படுகின்றன. தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த வேதன விடயத்தில் தனது பங்கை செவ்வனே செய்து முடிக்குமென்று நம்புகின்றேன்". இவ்வாறு கூறுகிறார் அவர்.

பலாங்கொடை வேவாவத்த தொட்டத்தைச் சேர்ந்த பி. ஆரோக்கியநாதன் தனது கருத்தினை இவ்வாறு பகிர்கின்றார்.

"இது தோட்டத் தொழிலாளிக்குக் கிடைத்த முதலாவது  ஏமாற்றம் அல்லவே! காலாகாலம்  இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. தொழிலாளியிடம் சந்தா வாங்கிக் கொண்டு தொழிற்சங்கம் நடத்தும் தலைமைகள் எங்கள் சம்பளத்தைத்  தாமாக தீர்மானிப்பது என்ன நியாயம்? கூட்டு ஒப்பந்தம் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. அது பற்றி எமக்கு விளக்கம் வேண்டும். எங்களோடு கலந்து பேசி நியாயமான சம்பளத்தை உறுதி செய்து கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டுமே தவிர தமக்கு சாதகமான வகையில் ஒப்பந்தம் செய்து கொள்வது பெருந் துரோகம். ஓப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய தலைவர்கள் தேர்தல் வரும் போது மட்டும் ஒப்பந்தத்தை விலாவாரியாக விமர்சிக்கிறார்களே தவிர இது பற்றி அக்கறை காட்டுவதே இல்லை" இவ்வாறு அவர் கூறுகிறார்.

கடந்த 2016ஒப்பந்தத்தின் போது இதே அரசாங்கத்தின் அழுத்தம் இருந்ததாக கையொப்பமிட்ட தொழிற்சங்கள் கூறின. அரசாங்கமும் இதனை மறுத்துரைக்கவில்லை. இந்தத் தடவையும் அதுதான் நடந்திருக்கின்றது.

இரகசியமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போதும் தற்போது எல்லாமே வெளிச்சத்துக்கு வந்து விட்டன. இந்த 200ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னணியில் எத்தனை எத்தனை போராட்டகள், சூளுரைகள்...

 இறுதியில் இப்படியொரு எமாற்றமே மிஞ்சும் என்று எவருமே கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின் கீழேயே அரசு பொறுப்பில் உள்ள பொருந்தோட்டங்கள் வருகின்றன. 1000ரூபா சம்பள அதிகரிப்பை கம்பனி தரப்பால் தாராளமாகவே வழங்க முடியும் என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர். அவரது கருத்தையாவது அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்கலாம்.

இதேநேரம் 140ரூபா உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகையை வழங்காவிட்டால் அரசாங்கத்துக்கு தரப்படும் ஆதரவு மறு பரிசீலனைக்குள்ளாக்கப்படும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த 5ம் திகதிவரை அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்கியது தமிழ் முற்போக்குக் கூட்டணி. இப்பத்தி அச்சாகும் நேரத்தில் நடந்தது என்னவென்று வெளிவந்திருக்கவே செய்யும்.

சற்றும் எதிர்பாராத நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் அலரி மாளிகை பிரசன்னம் தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத சங்கதியே. அந்த வெறுப்பு பிரதமர் மீதும் நவீன் திசாநாயக்க மீதும் கூட்டணிக்கு வரவே செய்யும். அதற்காக பதவி விலகல், ஆதரவை அகற்றல் என்பது எல்லாமே அரசியலில் '​ெகாமெடி' ஆகிவிட்ட சமாச்சாரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள்.

கூட்டு ஒப்பந்த முறைமை சிறந்தது. பழைமையானது என்ற நிலை சிறுகச் சிறுகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றது. பலரும் இதனை விமர்சிக்கவும் எதிர்க்கவும் தலைப்பட்டு விட்டார்கள். இந்த முறைமையை ரத்து செய்யக் கூடிய துணிவு சம்பந்தப்பட்ட தொழிற்சங்களுக்கு வரப்போவது இல்லை. நியாயமான சம்பளம் சரியான பராமரிப்புக்கு வழி இல்லாவிட்டால் பொருந்தோட்டங்களை அரசாங்கமே, பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. அதனைத் தோட்ட மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்களையும் சிறு தோட்டஉரிமையாளர்களாக ஆக்க வேண்டும் என்று பேசப்படுகின்றது.

நல்ல யோசனைதான். ஆனால் நடக்க வேண்டுமே... இன்றும் கூட பெருந்தோட்ட மக்களை அடிமைநிலைச் சமூகமாக அடக்கி வைத்திருப்பதிலேயே தோட்டக் கம்பனிகள் கவனம் செலுத்துகின்றன. எனினும் இம்மக்களுக்கான சம்பளத் திட்டம் தோட்ட மக்களை கவர்வதாக இல்லை. அதனால் வேறு வேலை தேடி தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட வேலையைக் கைவிட்டு வெளியேறுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவர்களை வேலைக்குச்  சமுகமளிக்கச் செய்யும் ஊக்குவிப்பு கொடுப்பனவாகவே 140ரூபா அமைந்தது. அதையும் துண்டிப்பது என்பது தேயிலைத் தொழித் தொடர்ந்தும் அதலபாதாளத்தை நோக்கி அடியெடுத்து வைக்கவே உதவும்.

கூட்டு ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு பெரும்பாலும் சம்பளப் பிரச்சினையை மட்டுமே பேசுவதால் அதனோடு தொடர்புபட்ட பல நலன்புரி விடயங்கள் நழுவ விடப்படுகின்றன என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.தோட்டத் தொழிலாளி ஒருவர் இறந்து போனால் இன்னும் கூட 2000ரூபாவே வழங்கப் பட்டு வருகின்றது. இதே போல வருடத்துக்கான ஊக்குவிப்புப் போனஸ் 750ரூபாவாகவே காணப்படுகின்றது. இவை பல வருடங்களுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகை ஆகும்.

சமகால வாழ்க்கைச் செலவு, விலைவாசி ஏற்றம், பொது பொருளாதார  நிலைமைக்கேற்ப தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை வகைப்படுத்தும் மனிதாபிமானம் எவருக்குமே இல்லை.

தற்போதை நிலையில் பெருந்தோட்டக் கட்டமைப்பு சிறுகச் சிறுகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம்.

புதிய கிராமங்களாக அவை பரிணாமம் அடைந்து வருவது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது. இதனடிப்படையில் பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்ட மக்களின் வாழ்வியலில் வகிபாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வருவது தவிர்க்கவியலாதது ஆகின்றது. சுகாதாரம், பாதை வசதி,நீர் விநியோகம, குடியிருப்பு வசதி போன்ற அனைத்துமே அரசு மயமாகிக் கொண்டு வருகின்றன.

இதனால் கம்பனி தரப்பின் மீதான அபிவிருத்தி செயற்பாட்டுக்கான சுமை அற்று வரும் நிலையில் உழைப்புக்கான ஊதியத்தை மட்டுமாவது உருப்படியாக வழங்க கம்பனி தரப்பு முன்வராவிட்டால் அதில் என்ன நியாயம் இருக்கிறதாம்?

அரசாங்கத்தின் தலையீடு காலம் தாழ்த்தி இடம்பெற்றுள்ளதால் தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனினும் கடந்த 05ஆம் திகதி வரை கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதைத் தள்ளி வைத்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கரிசனையைக் காட்டிள்ளார். இதேவேளை 140ரூபாவை மட்டும் இலக்காக வைத்து மீண்டும் கம்பனி தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துவதை புத்திஜீவிகள் விமர்சித்துள்ளார்கள். 140ரூபாய் மட்டுமே ஒரு தீர்வாக அமையாது. சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதற்கு வெளிப்படையான நடவடிக்கைகளே அவசியம் என்கிறார் சட்டத்தரணி இ.தம்பையா.

இப்பத்தி எழுதப்படும் போது, மலையகத்தில் ஆங்காங்கே மக்கள் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இளைஞர்களின் உணவு தவிர்ப்பு போராட்டங்களும் ஆரம்பாகி இருந்தன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களைப் போலவே தமிழ் முற்போக்குக் கூட்டணியும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் அமைதியின்மை தொடர்வது வரவேற்கக் கூடிய சங்கதி அல்ல. அதேவேளை அரசியலில் ஸ்திரமற்றதன்மை ஏற்படுவதும் நல்லதல்ல. அது இருப்புக்கு சவால் ஆகி விடும் அபாயம் உள்ளது. மலையகத் தலைமைகள் ஒன்றுபடுவதன் மூலமே உருப்படியாக எதனையும் சாதிக்க முடியும் என்பதே யதார்த்தம்.

இதேநேரம் கூட்டு ஒப்பந்த விவகாரத்திலும் மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் அரசாங்கத்தின் முழுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே சமகாலத்தில் மலையகத்தில் ஏற்பட்டு வரும் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தரும் செய்தியாக இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

தியத்தலாவை பாலசுப்பிரமணியம்

 


Add new comment

Or log in with...