காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இணைய கமலுக்கு அழகிரி அழைப்பு
மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லியில் கூறினார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி டெல்லி வந்தனர். கூட்டத்துக்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் அனைத்தும் மாநிலத்தில் எவ்வாறு நடைபெற்று கொண்டு இருக்கிறது. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் யாரென்று அடையாளம் காணப்பட்டுள்ளதா? தோழமை கட்சிகளோடு கூடிய உறவு எப்படி உள்ளது? புதிய கட்சிகள் கூட்டணியில் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா இந்த மாதம் தமிழகம் வருகிறார். அதுகுறித்த அதிகாரபூர்வ திகதி பின்னர் கட்சி தலைமை மூலம் அறிவிக்கப்படும். இதேபோல் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் இதே மாதத்தில் 2 முறை தமிழகம் வருவதாக தெரிவித்துள்ளார். அதனால் தேர்தல் பிரசார பயண திட்டம் குறித்த விவரங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். இதில் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடைய வெற்றிக்காகவும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் அனைவரும் முழுமையாக பாடுபடுவார்கள். அதன் அடிப்படையில் காங்கிரஸ் பிரசார வியூகம் அமைக்கப்படும்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மதச்சார்பற்ற அனைவரும் உள்ளனர். இதைத்தவிர பல்வேறு கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும். நடிகர் கமல்ஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர். இதில் அவருடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது. அவர் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.
Add new comment