திமுகவை கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது | தினகரன்


திமுகவை கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கமல் அவசியமில்லாமல் திமுக வை விமர்சித்தது வன்மையான கண்டனத்துக்குரியது  என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக  காங்கிரஸ் தலைவராக இருந்த சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக  கே.எஸ்.அழகிரி கடந்த 2ம் திகதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த  8ம் திகதி தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்றுக் கொண்டார்.

அதன்  பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுக - காங்கிரஸ்  கூட்டணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இணைய வேண்டும் என்று அழைப்பு  விடுத்தார். கமல் தொடர்ந்து அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என  விமர்சித்து வந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் அழைப்பு திமுக மற்றும்  காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இதனிடையே  திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாங்கள் சுமக்க  முடியாது.  மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கமல் கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அதற்குப் பதிலடியாக ''வெற்றிடம் என  நம்பி வந்தவர் விரக்தியில் பேசுகிறார்'' என திமுக எம்எல்ஏ வாகை  சந்திரசேகர் விமர்சித்தார்.

இந்நிலையில் அவசியமில்லாமல் திமுகவை  கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று சென்னையில்  செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது  என் கவனத்துக்கு வரவில்லை. அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை  விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக மீதான கமலின்  விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத்தான் உதவும்.

எந்த ஒரு  அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான  காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிதான் முடிவு செய்யும்'' என்று  கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என்று முன்பு கூறிய கே.எஸ். அழகிரி,  இங்கு கமலைக் கண்டித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...