ஆயிரம் ரூபாவுக்கு அப்பாலும் அவலங்கள், வேதனைகள்! | தினகரன்

ஆயிரம் ரூபாவுக்கு அப்பாலும் அவலங்கள், வேதனைகள்!

மலையகப் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.

தொழிற்சங்கங்களின் தலைவர்கள் வீறாப்புப் பேசியதற்கிணங்க, ஆயிரம் ரூபா நாட் சம்பளம் எவ்வாறாயினும் தங்களுக்குக் கிடைத்து விடுமென முழுமையாக நம்பியிருந்த தோட்டத் தொழிலாளர்களின் கனவு இப்போது பொய்த்துப் போய்விட்டது.

தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை கூட்டு ஒப்பந்தம் பூர்த்தி செய்யாத போதிலும் அவர்கள் வேறுவழியின்றி விரக்தி நிறைந்த மனநிலையுடனேயே வேலைக்குத் திரும்பியுள்ளனர். அன்றாட வாழ்வாதாரத்துக்கு அவர்களுக்குப் பணம் தேவை. எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்காத போதிலும், கிடைக்கின்ற சம்பளத்தைப் பெறுவதற்காவது அவர்கள் தங்களது வேலைக்குச் சென்றே ஆக வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் வறுமை காரணமாக எழுந்துள்ள இந்தப் பலவீனமான நிலைமையே கம்பனிகளுக்கு வாய்ப்பாகிப் போயுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை பற்றி கம்பனிகளுக்கு நன்றாகவே தெரியும். தொழிலாளர்கள் மாதாந்தம் தங்களுக்குக் கிடைக்கின்ற சம்பளத்தை மட்டுமே நம்பியபடி வாழ்கின்றனர். பண வருவாய்க்கான வேறு மார்க்கங்கள் அவர்களிடம் இல்லை. அவர்களால் வேலைநிறுத்தப் போராட்டங்களை நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது முடியாத காரியம். அன்றாடம் தோட்ட வேலைக்குச் சென்றாலேயே தங்களால் சீவனோபாயத்தைக் கொண்டு நடத்த முடியுமென்பதை தோட்டத் தொழிலாளர்கள் நன்கறிவர். எனவே அவர்கள் எப்படியாவது கடமைக்குத் திரும்பியே ஆகவேண்டும்.

இவ்வாறான உண்மையை கம்பனிகள் மட்டுமன்றி, தொழிற்சங்கங்களும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. இவ்வாறானதொரு வாழ்க்கைத் தரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளதனாலேயே அக்காலம் தொடக்கம் இன்றுவரை அவர்களால் தங்களுக்குரிய நியாயமான சம்பள உயர்வை மாத்திரமன்றி ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியாதிருக்கின்றது.

உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இதுவொரு பரிதாபத்துக்குரிய நிலைமை எனலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக கடினமாக உழைக்கின்ற தொழிலாளர்கள் தங்களது பொருளாதார தாழ்நிலைமை காரணமாக நியாயமான வேதனைத்தையும் உரிமைகளையும் கோரி போராட முடியாதிருக்கின்றது. வறுமை என்ற பலவீனமானது அவர்களது நியாயமான கோரிக்கைகளை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றது.

தொழிலாளருக்கான வேதனங்கள் மற்றும் உரிமைகள் குறித்து விதந்துரைக்கும் சர்வதேச அமைப்புக்களின் சமவாயங்கள் எதுவுமே மலையக தோட்டத் தொழிலாளர்களை இன்னும் எட்டியும் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பொறுத்தவரை இது பாரியதொரு அநீதியாகும். அதாவது எங்கு சென்றுமே வெல்லப்பட முடியாததொரு அநீதி!

ஆனாலும் நியாயமான உரிமையை போராடிப் பெறுவதற்கான திராணி அவர்களிடம் இல்லையென்பதற்காக, அவர்களுக்குக் கிடைக்கின்ற குறைந்தபட்ச வேதனத்தையோ அல்லது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையோ நியாயமென எவரும் ஏற்றுக்கொள்வது தர்மமன்று. எமது நாட்டின் ஏனைய தொழில் துறைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் வேதனத்துடன் ஒப்பிடுகின்ற போது, தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கின்ற சம்பளமானது அற்பம் என்பதை நேர்மையுடன் சிந்திக்கின்ற எவருமே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பெருந்தோட்டங்களில் இப்போதெல்லாம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆயிரம் ரூபா சம்பளத்தை எவ்வாறாயினும் பெற்றுத் தருமாறு தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர். அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு அவர்கள் கோருகின்றனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் நொந்துகொள்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் பார்வை மாத்திரமன்றி, ஏனையோரின் பார்வையும் தற்போது ஆயிரம் ரூபா மீதும், கூட்டு ஒப்பந்தம் மீதும் குவிந்திருக்கின்றன. அவர்களது வறிய பொருளாதார நிலைமையின் விளைவாக ஏற்பட்டிருக்கின்ற பரிதாபங்களையும் சமூக சீர்கேடுகளையும் இவ்விடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பதும் இங்கு அவசியமாகின்றது.

மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சிறுமிகள் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய நகரங்களிலுள்ள செல்வந்தர் வீடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவதும் குடும்ப வறுமையின் பரிதாபமான விளைவுகளில் ஒன்றாகும்.

கொழும்பு போன்ற நகரத்தை எடுத்துக் கொள்வோமானால் அங்குள்ள செல்வந்தர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இவ்வாறு சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ள முடியும். இச்சிறுமிகளெல்லாம் மலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாவர்.

இச் சிறுமிகளின் பெற்றோருக்கு பண ஆசை காட்டி அந்த அப்பாவிச் சிறுமியரை கொழும்புக்கு அழைத்து வந்து செல்வந்தர் வீடொன்றில் ஒப்படைக்கும் காரியத்தில் ஈடுபடும் தரகர்கள் பலர் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

இச்சிறுமிகள் வீட்டு வேலைக்கு உரியவர்களல்லர். அவர்கள் கல்விகற்க வேண்டிய வயதினராவர். தாய் தந்தையரின் அரவணைப்பிலும், உறவினரின் அன்பில் திளைத்தும் வாழ விரும்புபவர்கள். ஆனாலும் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் முன்பின் அறிமுகமில்லாதவர்களின் வீட்டில் அவர்கள் வேலைசெய்ய வேண்டுமென்ற விதி எழுதப்பட்டு விட்டது.

பெற்றோரைப் பிரிந்த சோகம், வீட்டுப் பிரிவினால் ஏற்பட்ட ஏக்கம் போன்றவற்றையெல்லாம் உள்ளத்தில் சுமந்தபடி அந்தச் சிறுமியர்கள் துன்பத்தில் வாடுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்துக்காகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், பெருந்தோட்டங்களின் இதுபோன்ற ஏனைய அவலங்களையும் கவனத்தில் கொள்வது மிகவும் பொருத்தமாகும். சம்பள விடயத்தில் மாத்திரமன்றி ஏராளமான அநீதிகள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மனதில் கொள்வது அவசியம்.


Add new comment

Or log in with...