ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம் | தினகரன்


ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்-UNP 6 Organizers Appointed

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து உருவாக்கவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி மூலம் ஜனநாயகம் நீதிமன்றத்தின் சுவாதீனம் ஆகியவற்றை பாதுகாத்து சுதந்திரமான சமூகத்தை உருவாக்குவோம்” என்றார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்-UNP 6 Organizers Appointed

“ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை உரிய முறையில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் அவ்வாறு மேற்கொள்ளாத அமைப்பாளர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை கட்சி முடிவெடுக்கும்” எனவும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “வெற்றிடமாக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு எமது கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கமைய அதன் முதற்கட்டமாக இன்று 6 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.”

“இன்றைய தினம் கட்சியின் அமைப்பாளர்களாக, பொறுப்பேற்றுக் கொண்ட அனைவரும் புதிய வேலைத் திட்டங்கள் ஊடாக முன்னோக்கி செல்ல வேண்டும். அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசி முன்னணியுடன் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்முன்னணியில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்பதே எமது நோக்கமாகும். அதற்கான போராட்டத்திற்கு தயாராகின்ற பணிகளையே நாம் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றோம்.” என்றார்.

இந்நிகழ்விற்கு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் கல்வி அமைச்சர் அகில விராஜ், பிரதமர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள்

  1. பிரபல சிங்கள பாடகர் ரூகாந்த குணதிலக - தம்பதெனிய அமைப்பாளர்
  2. கவிந்த ஜயவர்தன எம்.பி. -  நீர்கொழும்பு அமைப்பாளர்
  3. லலித் திசாநாயக்க - அரநாயக்க அமைப்பாளர்
  4. திலிண பண்டார தென்னகோன் - பாத்ததும்புறை அமைப்பாளர்
  5. மஞ்சுள பண்டார - வாரியபொல அமைப்பாளர்
  6. டி.எம்.யு.பி. விஜே நாயக்க  - ஹிரியால அமைப்பாளர்

Add new comment

Or log in with...