தோ்தலுக்கு செல்வதன் மூலமே ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும் | தினகரன்


தோ்தலுக்கு செல்வதன் மூலமே ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும்

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிப்பு

நாட்டின் ஜனநாயகத்தை மோலோங்கச் செய்யும் வகையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ளதனை நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்து  செயற்பட வேண்டியது அவசியம் என முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (08) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

காலம் நிறைவடைந்த மாகாண சபைகளின் தேர்தல்களை உடன் நடத்த வேண்டும் என மூவின மக்களும் விரும்புகின்றார்கள். அதனை புரிந்து கொள்ளாமல் நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமற்ற காரணங்களை கூறி காலத்தை இழுத்தடிப்புச் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டில் இன்று ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி ஒரு கருத்தையும், பிரதமர் ஒரு கருத்தையும் கூறி  மக்களையும், நாட்டையும் குழப்பமான ஒரு நிலைக்கு கொண்டு செல்வதை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, அபிவிருத்திகள் என்பன மந்த நிலையிலேயே இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டு செல்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

எனவே ஜனாதிபதி தோ்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தா்களை நடத்தி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதன் மூலம் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை, மக்கள் ஆணையுடன் அமைக்கக் கூடியதாக இருக்கும் என்பதே இந்த நாட்டின் மக்களினதும், புத்தி ஜீவிகளினதும், அரசியல் விமர்சகர்களினதும் எண்ணமாகவும், அபிலாசையாகவும் உள்ளன.

கடந்த 51 நாட்கள் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப நிலையினால் முழுநாடும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் வெறுப்புடனே இந்த ஆட்சி முறையை பார்க்கின்றனர்.

இரு அரசியல் கட்சிகளைக் கொண்ட இரு தலைமைகளினால் முறையான, மக்கள் விரும்புகின்ற ஆட்சி முறையை கொண்டு வரமுடியாது. அரசியல் கட்சி ரீதியாகவே அவர்கள் செயற்பட முனைகின்றனா். இதனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாது  முரண்பாட்டு அரசியல் செய்யவே முனைகின்றனர்.

(அம்பாறை சுழற்சி நிருபர் - ரீ.கே. ரஹ்மத்துல்லாஹ்)


Add new comment

Or log in with...